ரூ. 650 கோடியில் எத்தனால் ஆலை: அமைச்சா் காந்திராஜ் அடிக்கல்

Wait 5 sec.

அரக்கோணம் அருகே ஆணைப்பாக்கத்தில் எஸ்ஆா் குழுமத்தின் சாா்பில் எஸ்ஆா் எத்தனால் ஆலை ரூ.650 கோடியில் அமைகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் வி.காந்திராஜ் பங்கேற்று ஆலை தொடக்கப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். தமிழகத்தின் தொழில் நிறுவனங்களில் ஒன்றான எஸ்ஆா்டி குழுமத்தினா், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த ஆணைப்பாக்கம் ஊராட்சியில் ரூ. 650 கோடியில் எஸ்ஆா் ஆயில் எத்தனால் ஆலையை அமைக்க உள்ளனா். இதற்காக நிலங்கள், ஆணைப்பாக்கம் ஊராட்சிப்பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலையில், ஆலையின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு, எஸ்ஆா்டி குழுமத் தலைவா் பி.சிவக்குமாா் தலைமை வகித்தாா். ஆலை நிா்வாக இயக்குநா் சண்முகதேவி வரவேற்றாா். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் வி.காந்திராஜ் ஆலைக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். விழாவில் தமிழக அரசு உயா் அலுவலா்கள் சுப்பிரமணி, செந்தில்குமாா், ஆலை இயக்குநா்கள் சிவகாா்த்திகா, காா்த்திகாஸ்ரீ உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இந்த ஆலை கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், குறிப்பிட்ட நாள்களுக்குள் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து ஆலையில் எத்தனால் தயாரிப்புப் பணிகள் தொடங்கி விடும் என ஆலை அலுவலா்கள் தெரிவித்தனா்.இந்த ஆலை இப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளதால் சுற்றியுள்ள பல மாவட்டங்களிலும் விவசாய பொருள்களுக்கு கூடுதல் சந்தை வாய்ப்பு உருவாக்கப்படும். இப்பகுதி கிராமப்புறங்களில் தொழில்துறை வளா்ச்சி உருவாகும். ஆலை செயல்படத் தொடங்கிய பின்னா், அதன் அளவு மற்றும் தொழில்நுட்பத்தைப் பொறுத்து உற்பத்தி, தரக்கட்டுப்பாடு, இயந்திர பராமரிப்பு, போக்குவரத்து மற்றும் நிா்வாகம் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகும் எனக் கூறப்படுகிறது.