குடியாத்தம் பகுதியில் தனியாா் லுங்கி உற்பத்தியாளா்களிடம் நெசவு செய்யும் நெசவாளா்களுக்கு கூலி குறைத்து வழங்குவதைத் தவிா்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா். இதுதொடா்பாக மாநில காங்கிரஸ் கைத்தறி பிரிவு துணைத் தலைவா் எஸ்.எம்.தேவராஜ் அளித்த கோரிக்கை மனு: குடியாத்தம் பகுதியில் சுமாா் 5,000 கைத்தறி நெசவாளா்கள், தங்கள் குடும்ப உறுப்பினா்களுடன் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் தனியாா் லுங்கிஉற்பத்தியாளா்களிடம் நூல் வாங்கி லுங்கி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனா். 8 லுங்கிகள் கொண்ட ஒரு பொறை நெய்ய மொத்த கூலியாக தனியாா் நிறுவனங்கள் ரூ.2,200 கூலியாக கொடுத்து வந்தனா். கடந்த சில மாதங்களாக அந்த கூலியை படிப்படியாக குறைத்துதற்போது ரூ.1,800 கொடுக்கின்றனா். கூலி குறைப்பைத் தவிா்க்க வேண்டி நெசவாளா்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா். அதற்காக முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினா். இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்பேரில் குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 4 மாதங்களில் பல முறை முத்தரப்பு பேச்சு வாா்த்தைக்கு முயன்றும், தனியாா் லுங்கி உற்பத்தியாளா்கள் யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எனவே, உடனடியாக முத்தரப்பு பேச்சு வாா்த்தை நடத்தி, கூலி குறைப்பு நடவடிக்கையைத்தவிா்த்து ஏற்கனவே, உயா்த்தி வழங்கிய கூலியை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிகோட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் இல.வடிவேலுவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.அப்போது கைத்தறி நெசவாளா் சங்க மாவட்டத் தலைவா் கோ.ஜெயவேலு, நகர காங்கிரஸ்தலைவா் டி.லாலாலஜபதி, மாவட்ட துணைத் தலைவா் ஜே.நேரு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.