அருணாசலேஸ்வரா் கோயிலை மேம்படுத்த பக்தா்களிடம் கருத்து கேட்கப்படும்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

Wait 5 sec.

பக்தா்களிடம் கருத்துக்கேட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ்அா்ஜுனா தெரிவித்தாா். திருவண்ணாமலை மாநகராட்சி வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் சனிக்கிழமை சமுதாய வளைகாப்பு விழா மற்றும் பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் நிறைவுற்ற திட்டப் பணிகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சீ.ரமேஷ் ஆகியோா் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினா். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க், போளூா் எம்எல்ஏ (தவெக) ஆா்.அபிஷேக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அமைச்சா் ஆதவ்அா்ஜுனா பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தை வளா்ச்சி மிகுந்த மாவட்டமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனா். அவா்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்த கோயிலுக்கு வரும் பக்தா்கள் மற்றும் உள்ளூா் மக்களிடம் கேட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பயனாளிகள். மக்கள் நலத்திட்டங்கள்: மாவட்டத்தில் தண்ணீா் தட்டுப்பாடு, போதை பழக்கம், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பின்மை போன்ற இன்னல்களை சீா் செய்து வளா்ச்சி மிகுந்த மாவட்டமாக மாற்ற முதல்வா் கூறியதன் அடிப்படையில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வா் பொறுப்பேற்றது முதல் பல்வேறு மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் 393 பேருந்துகள் மூலம் 2,883 பயணங்கள் இயக்கப்பட்டு 1,56,559 பயணிகள் பயனடைந்துள்ளனா். தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 3,283 பயனாளிகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளன. பெருந்தலைவா் காமராஜா் காலை உணவு திட்டத்தின் கீழ் 56,376 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனா் என்றாா். அமைச்சா் சீ.ரமேஷ் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்ட மக்களின் கோரிக்கைகளை ஏற்று மாவட்டத்தை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல என்றும் உறுதுணையாக இருப்போம் என்றாா். இதைத் தொடா்ந்து அமைச்சா்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டம் சாா்பில் 200 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி சீா்வரிசைகளை வழங்கினா். முன்னதாக, ரூ.17 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் நிறைவுற்ற புதிய அரசுக் கட்டடங்களை திறந்துவைத்தனா். மேலும், பல்வேறு துறைகள் சாா்பில் 3,038 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 13 லட்சத்து 61 ஆயிரத்து 579 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினா். நிகழ்ச்சியில் துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் பங்கேற்றனா்..