கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடையில்லை என்றும், அதே நேரத்தில் செல்போன்களை ‘சுவிட்ச் ஆப்’செய்து எடுத்து செல்ல வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த செப். 1 ஆம் தேதி முதல் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், மதுரை அழகர் கோயில் உள்ளிட்ட 52 கோயில்களில் பக்தர்கள் போன் கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத்துறை தடைவிதித்தது.வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தையும் அமைதியான சூழலையும் பாதுகாப்பதையும், பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு செல்போன் பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது.கோயில்களுக்குள் உள்ள தெய்வங்களையும் சிலைகளையும் பக்தர்கள் புகைப்படம் எடுப்பது அல்லது விடியோ பதிவு செய்வது போன்ற இடையூறு விளைவிக்கும் செயல்களைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் கூறியிருந்தார்.அதனைத்தொடர்ந்து, கோயில்களின் வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் செல்போனை கொடுத்து விட்டு பக்தர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்யவும், மொபல்போன் பாதுகாப்புக்கு ரூ.5 கட்டணமாகவும் வசூலிக்கப்பட்டு வந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் செல்போன் மட்டுமின்றி, சார்ஜர், ஹெட்போன்ஸ், கைக்கடிகாரம் உள்ளிட்டவற்றுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பக்தர்கள் பெரும் அவதியடைந்தனர்.செல்போனை பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதற்கு ஒரு மணிநேரத்துக்கும் மேலாகவும், சாமி தரிசனம் மற்றும் தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் செல்போனை பெறுவதற்கு ஒரு முறையும் என்று பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்ததால் பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாகி அசௌகரியத்தைச் சந்தித்தனர். இதனால், செல்போன் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.செல்போனை பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை உணர்ந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வந்தனர்.இந்த நிலையில், பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை, செல்போன் கொண்டு செல்வதில் இருந்த கட்டுப்பாட்டுகளைத் தளர்த்தி சில தளர்வுகளை அறிவித்துள்ளது. புதிய தளர்வுகளின் படி பக்தர்கள் இனி தங்களின் செல்போன்களை கோவிலுக்குள் எடுத்துச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், செல்போன்களை 'சுவிட்ச் ஆப்' செய்து எடுத்து செல்ல வேண்டும். கோயில்களுக்குள் செல்போனை கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும், சிலைகள், பூஜைகளை புகைப்படம், விடியோ எடுப்பது, செல்பி, ரீல்ஸ் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளை எடுக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்றும், இதனை மீறுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.The Hindu Religious and Charitable Endowments Department has announced that there is no ban on carrying mobile phones into temples; however, they must be switched off.