இந்த வாரம் கலாரசிகன் - 18-10-2026

Wait 5 sec.

கனடாவில் நடைபெறும் உலகத் தமிழ் ஆய்வு மாநாட்டில் கலந்துகொள்ள முடியவில்லை. அக்டோபர் 15 முதல் 18}ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு, கனடா தூதரகத்தின் நுழைவு அனுமதிக்கு (விசா) தாமதமாக விண்ணப்பித்தது எனது தவறுதான்.கனடாவின் டொராண்டோ மாநகரில் உள்ள சென்டென்னியல் கல்லூரி வளாகத்தில் தமிழ் மரபிசையும், ஊர்வலமுமாக மாநாடு தொடங்கியது என்று அதில் கலந்துகொண்டிருக்கும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் ம. இராசேந்திரன் தகவல் அனுப்பி இருக்கிறார். பல்வேறு நாடுகளில் இருந்தும் டொராண்டோ நகரில் குழுமிய தமிழ் ஆர்வலர்களும், ஆய்வறிஞர்களும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்ட தமிழர்களின் தனித்துவமான கலைகள் ஊர்வலத்தில் காணப்பட்டதைப் புகைப்படங்கள் உணர்த்துகின்றன. இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன், பேராசிரியர்கள் கங்காதரன், சந்திரகாந்தன், செல்வநாதன் மட்டுமல்லாமல் மலேசியாவில் இருந்து பத்திரிகையாளர் நண்பர் ராஜேந்திரனும் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.கனடாவில் இன்று நிறைவடையும் அந்த மாநாட்டின் கருப்பொருள் 'செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்' என்று வைக்கப்பட்டிருக்கிறது. 13 நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களின் 96 ஆய்வுக் கட்டுரைகள் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஆய்வுகள் தமிழையும், தமிழ்ச் சமூகத்தையும் புதிய கோணத்தில் அவதானிக்கின்றன.''நமது மொழியின் வளமும், இலக்கியச் செல்வமும் புதிய தொழில்நுட்பங்களில் இடம்பெற வேண்டும். நமது வரலாற்றையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குப் பாதுகாத்து வழங்க வேண்டும்'' என்கிற அனைத்துலகத் தமிழ்ப் பேரவைத் தலைவரும், உலகத் தமிழ் ஆய்வு மாநாட்டு வழிகாட்டல் குழுத் தலைவருமான நிமல் விநாயகமூர்த்தியின் வரவேற்புரைக் கருத்து காலத்தின் கட்டாயம்.சேவியர் தனிநாயகம் அடிகளின் முனைப்பால் உருவான 'உலகத் தமிழ் மாநாடு' என்கிற முயற்சி, முறையாகப் பயணிக்கவில்லை என்கிற மனக் குறை என்னைப் போலவே பலருக்கும் உண்டு. இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, உலகளாவிய அளவில் நடத்தப்படும் தமிழ் ஆய்வுகளைப் பதிவு செய்ய மாநாடுகள் நடத்த வேண்டிய அவசியத்தைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் அறிஞர்கள் ஒன்றாகக் கூடவும், கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்தும் உலகத் தமிழ் மாநாடுகள், தனிப்பட்ட சிலரின் மனமாச்சரியங்களுக்காக குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து நடைபெறாதது வேதனையளிக்கிறது.1974}இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின்போது நடந்த தாக்குதல்களைத் தமிழ்கூறு நல்லுலகம் மறந்துவிட முடியாது. குறிப்பாக, ஈழத் தமிழர்கள் மத்தியில் அப்போது ஏற்பட்ட காயம் இன்னும்கூட ஆறவில்லை. அதைக் கருத்தில் கொண்டுதான் நிமல் விநாயகமூர்த்தியின் தலைமையில், இப்போது கனடாவில் இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டது.இப்படியொரு தமிழ் வேள்வி கனடாவில் நடைபெறுகிறது என்பதைத் தாய்த் தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் முக்கியத்துவம் தந்து மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவில்லை என்கிற வருத்தம் எழுகிறது. இனி வரும் காலங்களில் தமிழ் ஆய்வுகளும், இது போன்ற ஆராய்ச்சி மாநாடுகளும் பல்கலைக்கழக வளாகங்களில் முடங்கிவிடுமோ என்கிற அச்சம் எழுகிறது. அப்படியொரு நிலைமை தமிழுக்கு வந்துவிடக் கூடாது! இசையரசி என்று சொன்னால் அது இந்தியாவைப் பொருத்தவரையில் எம்.எஸ். சுப்புலட்சுமியை மட்டும்தான் குறிக்கும். வடநாட்டில் ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் பல புகழ்பெற்ற பாடகியர் இருந்தார்கள், இருக்கிறார்கள்; இந்தியாவில் திரைப்படப் பின்னணிப் பாடகியர் பலர் இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆனால், அவர்களே 'இசையரசி' என்று கருத்து வேறுபாடில்லாமல் ஏற்றுக் கொள்ளும் ஒரே பாடகி 'எம். எஸ்.' அம்மாவாகத்தான் இருக்கும்.மதுரை மேற்குக் கோபுர வாசல் தெருவின் குறுக்குச் சந்தான ஹனுமந்த ராயன் கோயில் தெருவில் பிறந்த அந்தச் சிறுமி, சென்னையின் தலைசிறந்த சங்கீத சபாக்களை மட்டுமல்ல, சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பான ஐக்கிய நாடுகள் சபையையும்கூட தனது குரல் வளத்தாலும், இசை ஞானத்தாலும் கட்டிப்போட்ட வரலாறுதான் ரமணன் எழுதியிருக்கும் 'காற்றினிலே வரும் கீதம்'. இசையரசியின் வாழ்க்கைப் பயணம் என்கிற தலைப்பில் குறிப்பிட்டிருந்தாலும், இது உண்மையில் ஒரு சமகால கர்நாடக சங்கீதத்தின் வரலாறும்கூட என்று கூற வேண்டும்.லட்சக்கணக்கான வீடுகளில், அதிகாலை பூபாளமாக ஒலிப்பது 'எம்.எஸ்.' அம்மாவின் வெங்கடேச சுப்ரபாதமும், விஷ்ணு சஹஸ்ர நாமமும்தான். ஒரு மிகச் சாதாரணமான இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்த எம்.எஸ். சுப்புலட்சுமி என்கிற பெண்ணின் குரலும், அதில் இழைந்தோடும் பக்திப் பிரவாகமும் அவரை இசை தேவதையாக உயர்த்தியதை எழுத்தில் பதிவு செய்கிறது 'காற்றினிலே வரும் கீதம்'.'எம்.எஸ்.' அம்மாவின் ஆரம்பகால வாழ்க்கை; அவரது இசைப் பின்னணி; அவர் சென்னைக்கு வந்தது; தன்னைத் தனித்துவமான இசைவாணியாக உயர்த்திக் கொண்டது; சதாசிவத்துடனான அறிமுகம், திருமணம்; திரைப்பட வாழ்க்கை; பக்தி; சாதனைகள் என்று அவரது வாழ்க்கையைப் படம் பிடிப்பதுபோல எழுத்தில் வடித்திருக்கும் ரமணனின் வித்தகத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது.எட்டு வயதில் தனது முதல் குருநாதரிடம் சங்கீதம் கற்றுக்கொண்ட அதே பயபக்தியுடனும், ஆர்வத்துடனும் தனது 80}ஆவது வயதிலும் புதிய பாடல்களையும், சங்கதிகளையும் கற்றுத் தேர்ந்தவர் அவர். ஏறத்தாழ 2,000}க்கும் அதிகமான சாஹித்தியங்கள் (பாடல்கள்) அவருக்குத் தலைகீழ்ப் பாடாந்தரம். பள்ளிக்கூடம் சென்று முறையாகக் கல்வி கற்காத 'எம்.எஸ்.' தமிழ், தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம், மலையாளம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி மட்டுமல்ல, ஆங்கிலத்திலும்கூடப் பாடி இருக்கிறார்.தனது குரல் வளத்தாலும், இசை ஞானத்தாலும் ஈட்டிய பெரும் பொருளை எல்லாம், சமூக, ஆன்மிகப் பணிகளுக்காக நன்கொடையாக வழங்கிய வள்ளல் அவர் என்பது வெளியில் தெரியாத அவரது சிறப்பு. எம்.எஸ். அம்மாவின் குரல், 'காற்றினிலே கரையாத கீதம்'.அயப்பாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயாவில் தமிழாசிரியராகப் பணியாற்றும் ப. திருமால் எழுதிய கவிதை இது.மாற்றங்களை விரும்பும்வாக்காளர்கள் வாழ்வில்எவ்வித மாற்றமுமில்லை!