பக்தி இலக்கியங்களில் ஓரெழுத்து ஒருமொழி

Wait 5 sec.

தொல்காப்பியம் உரியியல் சூத்திரம் 86 'ஐ' வியப்பாகும் என்பதாகும். வியப்பு என்பதற்கு அதிசயம், மெய்ப்பு, வியப்பைக் கூறுமலங்காரம், பாராட்டு, மேம்பாடு, அளவு என்று பல்வேறு பொருள்களை மதுரைப் பேரகராதி குறிக்கிறது.இயற்கையாகக் காணப்படுகிற ஒன்றிலிருந்து மாறுபட்டு நிகழும் ஒன்றினைக் கண்டு அதிசயித்து நிற்கிறோம். அப்போது நம்மையறியாமல் நம் வாயிலிருந்து 'ஐ' என்ற ஓரெழுத்து ஒருமொழி தோன்றுகிறது.இறைவன் தில்லைவாழ் அந்தணர்களுக்கு, ''என் அன்பன் திருநாளைப் போவான் இப் புண்ணிய பூமிக்கு எமை கண்டுய்யும் பொருட்டு வந்துள்ளான். இப்பிறவி நீங்க, எரியினிடை நீமுழ்கி, முப்புரிநூல் மார்பருடன் முன் அணைவாய் என்று நாம் கூறியதாகக் கூறுங்கள்'' என்று சொல்ல வந்த இடத்தில் சேக்கிழார் தில்லைவாழ் அந்தணர்கள் திருநாளைப் போவாரை ''ஐயரே!'' என்று அழைத்ததாக எழுதியுள்ளதை நோக்குக.நீரிடை முழ்கி எழுந்து வரலாம். எரியிடை முழ்கி எழுந்து வரல் பொதுவாக எல்லோர்க்கும் சாத்தியமற்ற ஒன்றே என்பதைக் குறிப்பால் உணர்த்தவே ஐயரே! என்று அந்தணர்களை வைத்து அழைக்க வைத்தார்.திருப்பாணாழ்வார் தமது அமலனாதிபிரான் பாசுரத்தில்ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்துஅரவின் அணையான்கோலமா மணிஆரமும் முத்துத்தாரமும் முடிவில்லது ஓர்எழில்நீலமேனி ஐயோ! நிறைகொண்டதுஎன் நெஞ்சினையேஎன்று பாடுகின்றார்.ஊழிக் காலத்தில் உலகு ஏழையும் உண்டு ஆலிலைமேல் ஒரு குழந்தையாய் வீற்றிருந்தவன், இன்று என் கண் முன்னே பாம்பணையில் பள்ளி கொண்டுள்ளான், அவன் பூண்டுள்ள பன்மணி ஆரமும், முத்து மாலையும் எல்லையற்ற அவனது நீலமேனியழகும் என் நெஞ்சில் நிலைத்து நின்று விட்டதே! என்று வியக்கிறார்.இராமன் இளையவனோடும், இல்லையென்று சொல்லும்படியான இடையினையுடைய சீதையோடும் கானகத்தில் நடந்து போகிறான். இராமனின் மேனியில் சூரிய ஒளிபட்டு மறைகின்ற அழகினைக் கம்பர் பாடுகிறார். மரகதம் என்ற திடப் பொருளையும் மறிகடல் என்ற திரவப் பொருளையும் மழைமுகில் என்ற வாயுப் பொருளையும் மை என்ற திடமும் திரவமுமான பொருளையும் இராமனுடைய அழகுக்கு உவமையாக்கிக் காட்ட முயல்கின்றார். உலகத்துப் பருப் பொருள்களின் நிலைகள் எதனுள்ளும் அடங்காது கடந்து நிற்கும் இப்பரம் பொருளைச் சொல்லால் வடிக்க இயலாது, தவித்து, வியந்து கம்பர் கூறுகின்றார்.வெய்யோன் ஒளி தன் மேனியின்விரி சோதியின் மறைய,பொய்யோ எனும் இடையாளொடும்இளையானொடும் போனான்மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ,ஐயோ, இவன் வடிவு! என்பது ஓர்அழியா அழகு உடையான்.ஐயோ! என்பதற்குத் தமிழ்த்தாத்தா உ.வே.சா. வியப்பு என்று உரை கண்டார். வை.மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார், ஐயோ! அதிசயமுற இரங்குதலைக் குறிக்கும் இடைச்சொல் என்று சூடாமணி நிகண்டு சூத்திரம் கொண்டு உரை கண்டார்.அச்சோ! ஐயோ! என்னே! எற்று! எவன்! எனும் சொல் அதிசயமுற இரங்கல்} சூடாமணிநிகண்டு.ஒரு நிகழ்வைக் கண்டு வியப்படையவும் (அதிசயம்), மனதில் தோன்றும் இரக்கத்தையும் வெளிப்படுத்துவதற்கு உரிய இடைச்சொற்களாகப் பயன்படுகின்றன என்பது இச்சூத்திரத்தின் பொருளாகும்.'ஓ' என்ற இடைச் சொல் ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை, கழிவு, அசைநிலை, பிரிநிலை ஆகிய எட்டுப் பொருள்களை உணர்த்தி நிற்கும். ஐயோவிலுள்ள ஓகாரத்தைச் சிறப்பு அல்லது அசைநிலை என்று கொண்டால் நாம் கருதுகின்ற பொருளைத் தருவதைக் காணலாம். 'ஐ' வியப்பாகும் என்பதே ஐயோ! என்று திருப்பாணாழ்வார் மற்றும் கம்பநாட்டாழ்வார் வாக்காக மலர்ந்துள்ளது என்று கருத இடந்தருகின்றது.முடிவில்லது ஓர் எழில் நீலமேனி ஐயோ! என்ற ஆழ்வார் பாசுர வரிகளைக் கம்பர், ஐயோ! இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையான் என்று கூறிப் போந்தார்.தமிழிலக்கணத்தையும் இலக்கியத்தையும் ஒரு சேரப் பருகிக் களிக்க வாய்ப்புத் தரும் பக்தி இலக்கியங்களை 'ஐ'} என்ற ஒரு மொழியால் போற்றுவோம்.