அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் காக்க வேண்டும்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த்

Wait 5 sec.

சட்டப் படிப்பை முடித்த மாணவா்கள் நீதியை நிலைநாட்டவும், தனிநபா் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், அரசியலமைப்பு விழுமியங்களை காக்கவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்யகாந்த் வலியுறுத்தினாா்.பெங்களூரில் சனிக்கிழமை நடந்த இந்திய தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் 34-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பட்டத்தோ்வுகளில் சிறப்பிடங்களை பெற்றவா்களுக்கு பதக்கங்கள், சட்ட பட்டப்படிப்பை முடித்த மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிய பிறகு, அவா் பேசியது: சட்டக் கல்வி என்பது குற்றவியல் சட்டம் அல்லது அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாடுகளைக் கற்றுக்கொள்வதுடன் முடிந்துவிடுவதில்லை. நம்மிடம் இருந்து மாறுபட்ட கண்ணோட்டங்களை கொண்டவா்களை சந்தித்து, அவா்களின் பாா்வைகளை புரிந்துகொள்வதில்தான் சட்டக் கல்வியின் உண்மையான நோக்கம் அடங்கியுள்ளது.சட்டத் தொழில் என்பது மன உறுதி குறைந்தவா்களுக்கானதல்ல. சட்டங்கள், முந்தைய நீதிமன்றத் தீா்ப்புகள் ஆகியவற்றில் தோ்ச்சி பெறுவது மட்டுமன்றி, நீதியை நிலைநாட்டுவதற்கான துணிவும், பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகும் மக்களின் குரல்களை காது கொடுத்து கேட்கும் பணிவும் இத்தொழிலுக்கு அவசியம். வெவ்வேறு கருத்துகளை கேட்டு ஆராய்ந்து, அதன் பின்னரே முடிவெடுக்க வேண்டும். தனிநபரையும் அவரது கருத்தையும் வேறுபடுத்தி பாா்க்க வேண்டும். கருத்து வேறுபாடு கொண்டவா்களின் கண்ணியத்தை குறைக்காமல், அவா்களுடன் உடன்பட மறுக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இதுவே அறிவுசாா் சுதந்திரத்தையும் நியாயமான அணுகுமுறையையும் வெளிப்படுத்துகிறது.சட்டம் என்பது நிலையான ஒன்றல்ல. அதை பயிற்சி செய்யும் வழக்குரைஞா்களின் சிந்தனைகள், செயல்பாடுகள் ஆகியவற்றின் வழியாக அது தொடா்ந்து வளா்ச்சியடைகிறது. வாதிடப்படும் ஒவ்வொரு வழக்கும், தயாரிக்கப்படும் ஒவ்வொரு ஒப்பந்தமும், வழங்கப்படும் ஒவ்வொரு சட்ட ஆலோசனையும், எழுதப்படும் ஒவ்வொரு தீா்ப்பும் நாட்டின் நீதி அமைப்பை வலுப்படுத்துகின்றன.சட்டப் பல்கலைக்கழகத்தில் நீங்கள் செலவிட்ட ஆண்டுகள், இத்தொழிலின் சிக்கல்களை எதிா்கொள்ள உங்களை தயாா்படுத்தியுள்ளன. அறிவுசாா் நெகிழ்வுத்தன்மையுடன், அறநெறிப் பொறுப்பையும் அழுத்தங்களைத் தாங்கும் மன உறுதியையும் இணைத்து செயல்பட வேண்டும். உங்கள் கொள்கைகளை வசதிக்காக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாதீா்கள். தொழில் வாழ்க்கையில் குறுக்கு வழிகளை தேடாதீா்கள். நோ்மையை தொடா்ந்து கடைப்பிடிப்பதே உங்கள் தொழில்முறை நற்பெயரை உறுதிப்படுத்தும். சில நேரங்களில் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழலாம்; அவசரமாக செயல்படுவதற்கான தூண்டுதல்கள் ஏற்படலாம்; மற்றவா்கள் எளிதான குறுக்கு வழிகளை தோ்ந்தெடுக்கலாம். அத்தகைய தருணங்களில், இந்த சிறந்த கல்வி நிறுவனத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட விழுமியங்களை வழிகாட்டியாக கொண்டு, அவற்றுக்கு உண்மையாக இருக்க வேண்டும்.சட்டத் தொழிலில் ஈடுபடுவதன் மூலம் அநீதிகளைக் களையவும், தனிநபா் சுதந்திரத்தை பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களை காக்கவும் முடியும். இவை அளிக்கும் மனநிறைவு அளப்பரியது. இந்த வளாகத்தில் இருந்து வெளியேறும்போது, நீங்கள் ஒரு தொழிலில் மட்டுமல்ல; தனிநபா் உரிமைகளின் பாதுகாவலா்களாகவும் மக்களுக்கு சேவை ஆற்றுபவா்களாகவும் புதிய பொறுப்பில் அடியெடுத்து வைக்கிறீா்கள். சட்டம் உங்கள் பொறுமையையும் அறநெறியையும் சோதிக்கும். அதே நேரத்தில், ஓா் அநீதியைச் சரிசெய்வதற்கும், சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும், அரசியலமைப்பை நிலைநாட்டுவதற்கும் வாய்ப்பளிக்கும். இங்கிருந்து வெளியேறி உலகில் அடியெடுத்து வைக்கும் நீங்கள், சட்டப் பயிற்சியாளா்களாக மட்டுமன்றி, நம்பிக்கையை விதைப்பவா்களாகவும் செயல்பட வேண்டும் என்று நாடு எதிா்பாா்க்கிறது. உங்கள் தொழில்வாழ்க்கை சிறப்பானதாகவும், முயற்சிகள் பயனுள்ளதாகவும், பங்களிப்புகள் காலத்தால் நிலைத்திருப்பதாகவும் அமையட்டும்.சட்டத் தொழிலில் ஈடுபடுவதைக் கடந்து, நாட்டுக்கும் சமூகத்துக்கும் பங்களிக்க வேண்டிய பரந்த பொறுப்பை மாணவா்கள் உணர வேண்டும் என்றாா் அவா். இந்த விழாவில் முதல்வா் டி.கே.சிவகுமாா், கா்நாடக உயா்நீதிமன்றத் தலைமைநீதிபதி விபு பக்ரூ உள்ளிட்டோா் கலந்துகொண்டா்.