இன்றைய இந்தியாவில் தொல்லியல் துறை, பண்டைய தரவுகளை அகழ்ந்தெடுப்பதோடு நின்றுவிடாமல், அறிவியல் ஆய்வு, பாரம்பரியப் பாதுகாப்பு, பொதுமக்களிடையே கல்வி விழிப்புணர்வு, சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கட்டமைப்பை நோக்கி முன்னேற வேண்டும். தொல்லியல் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசுத் துறைகளுக்கு மட்டுமே உரியதன்று, தொல்லியலாளர்கள், பல்கலைக்கழகங்கள், உள்ளாட்சி நிர்வாகங்கள், பொதுச் சமூக அமைப்புகள், பாரம்பரிய இடங்களைச் சுற்றி வாழும் மக்கள் ஆகியோரின் தொடர்ச்சியான கூட்டுறவு இதற்கு அவசியமாகும்.இந்த மாற்றத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்த சூழலைத் தமிழ்நாடு வழங்குகிறது. கீழடி, கொடுமணல், கொற்கை, அழகன்குளம் போன்ற தொல்லியல் தளங்களும், அதன் தொல்பழங்கால நிலப்பரப்புகள், பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடக்கலை மரபுகளும் பல்துறை சார்ந்த ஆய்வுகளுக்கு பரந்து விரிந்த வாய்ப்புகளை வழங்குகின்றன.தமிழ்நாடு தொல்லியல் துறை ஏற்கெனவே அகழாய்வுகள், கல்வெட்டியல் ஆய்வுகள், மரபுச்சின்னப் பாதுகாப்பு, அறிவியல் பகுப்பாய்வுகள் மற்றும் அருங்காட்சியகம் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. தொடர்ச்சியான நிதி ஒதுக்கீடு, நவீன தொழில்நுட்பங்கள், நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துவதன் வாயிலாக இம்முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதே தற்போதைய சவாலாகும்.தமிழ்நாடு மின்னணு தொல்லியல் மரபுச் சின்னங்கள் இயக்கத்தை (Tamil Nadu Digital Archaeological Heritage Mission) உருவாக்குவது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். தொல்லியல் தளங்கள், கல்வெட்டுகள், நினைவுச் சின்னங்கள், அகழாய்வுப் பதிவுகள் மற்றும் அருங்காட்சியகச் சேகரிப்புகள் ஆகியவற்றை புவியியல் தகவல் அமைப்பு (GIS), தொலை நுண்ணுணர்வு தொழில்நுட்பம், ஒளிப்பட அளவியல் (Photogrammetry), முப்பரிமாண மாதிரியாக்கம் (3D Modelling) மற்றும் அறிவியல் பகுப்பாய்வு நுட்பங்கள் வாயிலாக முறையாக ஆவணப்படுத்த வேண்டும். இவ்வாறு உருவாக்கப்படும் சரிபார்க்கப்பட்ட மிண்ணனு தரவுத் தொகுப்பு, தொல்லியல் ஆய்வுகளை மேம்படுத்துவதற்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய தொல்லியல் தளங்களை அடையாளம் காண்பதற்கும், மரபுச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கான திட்டமிடலைச் செம்மைப்படுத்துவதற்கும் பெரிதும் உதவும். அதேவேளையில், தொல்லியல் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பாதுகாப்பு அவசியமான தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், உரிய தரவுப் பாதுகாப்பு நடைமுறைகளும் உறுதியாகப் பின்பற்றப்பட வேண்டும்.அரசு, மாவட்ட அளவில் அரசு - பல்கலைக்கழகம் - சமூகம் இணைந்த பாரம்பரியக் கூட்டாண்மைகளை உருவாக்க வேண்டும். தொல்லியலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், வரலாற்றாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற சமூகப் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து, அழிவின் விளிம்பில் உள்ள தொல்லியல் தளங்களைக் கண்டறிந்து, உள்ளூர் வரலாற்று தரவுகளை ஆவணப்படுத்தி, ஒவ்வொரு தளத்திற்கும் ஏற்ற பாதுகாப்புத் திட்டங்களை வகுக்க முடியும். சமூகப் பங்கேற்பு என்பது தொழில்சார் நிபுணத்துவத்திற்கும், சட்டப்பூர்வ பொறுப்புகளுக்கும் துணை நிற்க வேண்டுமே தவிர, அவற்றிற்கு மாற்றாக அமையக் கூடாது.அகழாய்வு, ஆய்வகப் பகுப்பாய்வு, அறிவியல்முறைக் காலக்கணிப்பு, கல்வெட்டியல், பாதுகாப்புப் பணிகள், ஆய்வு முடிவுகளை உரிய நேரத்தில் வெளியிடுதல் ஆகியவற்றுக்கு அதிகரித்த, தொடர்ச்சியான நிதியுதவி வழங்கப்பட வேண்டும். போட்டி அடிப்படையிலான ஆய்வு மானியங்கள், பல்துறை ஆய்வகங்கள், தொல்லியல் துறைகள், பல்கலைக்கழகங்கள், அறிவியல் நிறுவனங்கள் இடையிலான கூட்டுப் பங்களிப்புகள் ஆகியவை, சான்றுகளின் அடிப்படையில் வரலாற்றை விளக்கும் இந்தியாவின் திறனை வலுப்படுத்தும்.தொல்லியல் பாதுகாப்பை மாவட்டத் திட்டமிடலுடனும், உள்கட்டமைப்பு வளர்ச்சியுடனும் ஒருங்கிணைக்க வேண்டும். பாரம்பரிய உணர்வுடன் கூடிய திட்டமிடல், முறையான தளத்தின் தாக்க மதிப்பீடுகள், தளங்களைத் தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் சேதங்களை உடனடியாக அறிக்கையாக வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் ஆக்கிரமிப்பு, கட்டுமானப் பணிகள், கல் குவாரிகள், அரிமானம் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றால் ஏற்படும் மீளமுடியாத இழப்புகளைத் தடுக்க முடியும்.அரசு சமூகத்தை மையமாகக் கொண்ட பாரம்பரியக் கல்வியையும், பொறுப்புமிக்க சுற்றுலாவையும் மேம்படுத்த வேண்டும். உள்ளூர் இளைஞர்களைப் பாரம்பரிய தலங்களைப் பற்றிய விளக்கவுரையாளர்களாகவும், அருங்காட்சியகக் பொறுப்பாளர்களாகவும், மின்னணு ஆவணப்படுத்தல் உதவியாளர்களாகவும் பயிற்றுவிக்கலாம். கவனமாகத் திட்டமிடப்படும் பாரம்பரிய முயற்சிகளால் மகளிர் தலைமையிலான தொழில்முனைவோர், பாரம்பரியக் கைவினைஞர்கள், உள்ளூர் வணிகர்கள் ஆகியோர் பயனடையலாம். யுனெஸ்கோவின் சமூக அடிப்படையிலான பாரம்பரியத் திட்டங்களும் இவ்வாறே மக்கள் பங்கேற்பு, நிலையான வாழ்வாதாரம், அனைவரையும் உள்ளடக்கிய முடிவெடுத்தல் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன.தொல்லியல் ஆய்வுகள் அறிவியல் நேர்மையையும், பொது பொறுப்புணர்வையும் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். அகழாய்வு அறிக்கைகள், காலக்கணிப்புக்கான சான்றுகள், பாதுகாப்பு தொடர்பான முடிவுகள் மற்றும் ஆய்வின் வரம்புகள் ஆகியவை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழிலும் ஆங்கிலத்திலும் தெரிவிக்கப்பட வேண்டும்.பள்ளி மற்றும் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் தொல்லியல் ஆய்வு முறைகள், விமர்சனப் பூர்வமான சிந்தனை மற்றும் மரபுசார் அறநெறிகள் ஆகியவை கற்பிக்கப்பட வேண்டும். இதன் மூலம் இளைய தலைமுறையினர் பொருள் சார்ந்த சான்றுகள், அறிஞர்களின் விளக்கங்கள் மற்றும் சரிபார்க்கப்படாத வரலாற்றுக் கூற்றுகள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாட்டைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.அரசுக்கு முன்வைக்கப்படும் ஆக்கபூர்வமான பரிந்துரைகள்தெளிவான முன்னுரிமைகள், அளவிடக்கூடிய விளைவுகள், தொடர்ச்சியான நிதியுதவி ஆகியவற்றுடன் மாநில அளவிலான தொல்லியல் ஆய்வு மற்றும் பாதுகாப்பு இயக்கத்தை நிறுவுதல்.சரிபார்க்கப்பட்ட தொல்லியல் பதிவுகள், புவிசார் தகவல் அமைப்பு (GIS) வரைபடங்கள், பாதுகாப்பு மதிப்பீடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்த விரிவான மின்னணு பாரம்பரியத் தரவுத்தளத்தை உருவாக்குதல்.நவீன ஆய்வகங்கள், சிறப்புப் பயிற்சி, பல்துறை ஆய்வுகள், உரிய நேரத்தில் ஆய்வு முடிவுகளை வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் அறிவியல்முறைத் தொல்லியலை வலுப்படுத்துதல்.பயிற்சி, முறையான பொறுப்புகள், வெளிப்படையான அறிக்கையிடல் வழிமுறைகள் ஆகியவற்றுடன் சமூகப் பாரம்பரியப் பேணுகைத் திட்டங்களை அறிமுகப்படுத்துதல்.தடுப்பு நிலைப் பாதுகாப்பு, உரிய சுற்றுச்சூழல் மற்றும் பாரம்பரிய மதிப்பீடுகள் ஆகியவற்றின் துணையுடன், பாரம்பரியப் பாதுகாப்பை வளர்ச்சித் திட்டமிடலில் ஒருங்கிணைத்தல்.அருங்காட்சியகங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், களப்பயிற்சித் திட்டங்கள், பன்மொழி மின்னணு வளங்கள் வாயிலாகத் தொல்லியல் கல்வியையும் பொதுமக்கள் சென்றடைவுப் பணிகளையும் விரிவுபடுத்துதல்.தொல்லியல் தளங்களின் முழுமைத்தன்மையைப் பாதுகாத்து, உள்ளூரில் சமத்துவமான வேலைவாய்ப்பை உருவாக்கும் பொறுப்புமிக்கப் பாரம்பரியச் சுற்றுலாவை ஊக்குவித்தல்.தளங்களின் நிலை, ஆய்வுத் தரம், சமூகப் பங்கேற்பு, கல்வித் தாக்கம், பாதுகாப்புப் பணிகளின் பயன்திறன் ஆகியவற்றை மதிப்பிட்டு, விளைவுகளை வெளிப்படையாகக் கண்காணித்தல்.இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தொல்லியலின் எதிர்காலம் என்பது அறிவியல் ஆய்வு, அரசின் பொறுப்புணர்வு மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவற்றுக்கு இடையே ஆக்கபூர்வமான உறவை ஏற்படுத்துவதைச் சார்ந்துள்ளது. அரசு நிறுவனங்கள் சட்டப் பாதுகாப்பு, வளங்கள் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பை வழங்க வேண்டும்; தொல்லியலாளர்கள் ஆய்வு முறைகளில் நேர்மையை உறுதி செய்ய வேண்டும்; பல்கலைக்கழகங்கள் ஆய்வையும் கல்வியையும் விரிவுபடுத்த வேண்டும்; மேலும் சமூகங்களுக்குப் பாரம்பரியப் பாதுகாப்பில் பங்களிக்க முறையான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.தொல்லியல் பாரம்பரியத்தை அரசு வெறும் கடந்த காலத்தின் பதிவாக மட்டும் கருதாமல், எதிர்காலத் தலைமுறையினருக்காகப் பாதுகாக்கப்பட வேண்டிய அறிவியல், கல்வி மற்றும் பண்பாட்டு வளமாக அங்கீகரிக்க வேண்டும். மேம்பட்ட தொழில்நுட்பம், தொடர்ச்சியான ஆய்வு முதலீடு, வெளிப்படையான நிர்வாகம் மற்றும் சமூகக் கூட்டாண்மை ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம், தொல்லியல் பாரம்பரிய மேலாண்மையில் மேலும் உள்ளடக்கிய, அறிவியல் பூர்வமாக வலுவான ஒரு மாதிரியைத் தமிழ்நாடு உருவாக்க முடியும்.(கட்டுரையாளர் - உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை)தொடர்புக்கு: Iniyane@gmail.comThe Future of Archaeology: Strengthening Government-Community Partnershipsதமிழ்நாட்டுத் தொல்லியல் 2040! சான்றுகளின் மறுவாசிப்பும் எதிர்காலத் தொலைநோக்கும்!