தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முயன்று கைதான கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் திகார் சிறையில் அடைக்கப்பட்டதற்கு, அகில இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் முறைக்கேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இதில், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமெனவும், அவர் மீது குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், தில்லியில் வழக்கமாகப் போராட்டங்கள் நடைபெறும் ஜந்தர் மந்தரில் போராட மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜந்தர் மந்தருக்குள் நேற்று அத்துமீறி நுழைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சிஜேபியின் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஆகியோர் இன்று (அக். 14) தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், அஜிங்கியா மட்டும் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி, அகில இந்திய மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ஜந்தர் மந்தரில் மூவர்ணக் கொடியை ஏற்றியதற்கு திகார் சிறையா?சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா ஆகியோர் 5 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிஜேபியுடன் அகில இந்திய மாணவர் சங்கம் துணை நிற்கிறது. அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, சிஜேபி நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்பட்டதற்கு ஏராளமான எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.திகார் சிறையில் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்காவுக்கு 5 நாள்கள் நீதிமன்றக் காவல்!The All India Students' Association has condemned the imprisonment in Tihar Jail of office-bearers from the CJP.