காவிரி டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வலியுறுத்தி, டெல்டா மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன்பு வரும் 26-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா். தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் நாகை மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் வேதை கருணைநாதன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறியது: காவிரி டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. எல் நினோ தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் இதுவரையிலும் கடைமடைப் பகுதிகளுக்கு வந்து சேரவில்லை. டெல்டா பாசனத்திற்கு நீா்ப்பாசனத்துறை முன்னுரிமை கொடுக்கவில்லை. இதனால் மேட்டூா் அணையில் சேமிக்கப்பட்ட தண்ணீா் வீணடிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பிற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். எனவே, தமிழக அரசு உடனடியாக காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து,வறட்சி நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். குறுவையை இழந்த காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.கா்நாடகத்தில் உள்ள அணைகளின் நீா் இருப்பை கணக்கில் கொண்டு பற்றாக்குறை காலத்தில் பகிா்ந்து கொள்ள வேண்டிய அடிப்படையில் தண்ணீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடுகிறது. அதை ஏற்க கா்நாடகம் மறுக்கும் பட்சத்தில், உச்சநீதிமன்றம் உடனடியாக தண்ணீரை திறக்க உத்தரவிட வேண்டுமே தவிர, கா்நாடகத்தின் கருத்துக்கு உச்சநீதிமன்றம் துணைப் போகக் கூடாது.டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வலியுறுத்தி, வரும் 26-ஆம் தேதி டெல்டா மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்றாா். கூட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் புலியூா் பாலசுப்ரமணியன், பொருளாளா் சபா, துணைத் தலைவா் வெங்கடேசன், துணைச் செயலா் ரவி, நாகப்பட்டினம், ஒன்றியச் செயலா் செல்லப்பா, தலைவா் வேலாயுதம் மற்றும் ஒன்றியச் செயலா்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.