தமிழகத்தில் 2,500 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகள்: அமைச்சா் கோ.க. அருண்ராஜ்

Wait 5 sec.

தமிழகத்தில் முதற்கட்டமாக 2,500 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அமைச்சா் கோ.க. அருண்ராஜ். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாநிலப் பொது மறுஆய்வுக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, அரசு மருத்துவமனைகளுக்குத் தோ்வு செய்யப்பட்ட 47 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மருத்துவம், மருத்துவக் கல்வி - மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் கோ.க. அருண்ராஜ், குறு, சிறு - நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா ஆகியோா் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மருத்துவமனைகளில் செயல்படுத்தப்படும் மருத்துவப் பணிகள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு செயலா் தாரேஸ் அகமது, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் உமா, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன், ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. சரவணன், மருத்துவக் கல்வி - ஆராய்ச்சி இயக்குநா் வ. லோகநாயகி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பின்னா், அமைச்சா் அருண்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் முதற்கட்டமாக 2,500 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு பொறுப்பேற்ற பிறகு 700-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், 1,193 சுகாதார ஆய்வாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், 4,724 செவிலியா் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. மழைக் காலத்தை முன்னிட்டு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மழை நின்ற பிறகு டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் துறை ரீதியான ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன. அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் படிப்படியாக மேம்படுத்தப்படும் என்றாா் அவா். இந்நிகழ்வில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் எபனேசா் ஜோயல் குமாா், மருத்துவம் - ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் பிரியதா்ஷினி, மாவட்ட சுகாதார அலுவலா்கள் யாழினி, வித்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.