பயிா்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அக். 21-ஆம் தேதி திண்டுக்கல்லில் 16 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என இடதுசாரி விவசாயச் சங்கங்கள் முடிவு செய்துள்ளன. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு கூட்டம் திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் எம். ராமசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தின்போது, தோ்தல் வாக்குறுதியின்படி விவசாயப் பயிா்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எதிரான ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தைக் கைவிட வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளா்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக். 21-ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் 16 இடங்களில் இந்த மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த போராட்டத்துக்கான ஏற்பாடுகளை இடதுசாரி விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் மேற்கொண்டு வருகிறது.