மறைந்த தேனிசைத் தென்றல் இசையமைப்பாளர் தேவா இசையமைத்துக் கொடுத்த பிஜிஎம் இசைதான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பட டைட்டில் கார்டுக்கு இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.ரஜினிகாந்தின் டைட்டில் கார்டின் பின்னணியில் இசைக்கும் அந்த பிஜிஎம் இன்று வரை ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆட்டுவித்து வருகிறது என்றால் அது மிகையில்லை.நடிகர் ரஜினி நடித்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த பாட்ஷா திரைப்படத்துக்கு இசையமைத்துக் கொடுத்தவரும் இசையமைப்பாளர் தேவாதான். பிரபல சினிமா இசையமைப்பாளரும் பாடகருமான தேவா சென்னையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 75.கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவா மாரடைப்பால் காலமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னையின் கானா பாடல்களை, உலகறியச் செய்தவர். கானா பாடல்களின் காட்ஃபாதர் என்றும் அவர் புகழப்பட்டவர்.1950-ம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி வேலூர் மாவட்டம் மாங்காடு பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் தேவா. இவரது இயற்பெயர் தேவநேசன் சொக்கலிங்கம். திரையுலகில் தேவா என அறிமுகமானார். தேவாவின் சகோதரர்கள் சபேஷ் - முரளியும் இசையமைப்பாளர்கள் ஆவர். தொடக்கத்தில் அவர் சென்னை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்து வந்துள்ளார். மனசுக்கேத்த மகராஜா என்ற திரைப்படத்தின் மூலம், 1986ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா.1990-ஆம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருதும், 1992-ஆம் ஆண்டு கலைமாமணி விருதும் வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் ஃபிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட பல தனியார் அமைப்புகளின் விருதுகளை வென்றவர். தேனிசைத் தென்றல் என அவரது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் தேவா, பல திரையிசைப் பாடல்களுக்கு இசையமைத்து தானே பாடியும் இருக்கிறார். 1990களில் சிறந்த இசையமைப்பாளராக கொடிகட்டிப் பறந்தவர்.