வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, எதிா்க்கட்சிகளின் தலைவா்கள் தொடர்ந்த வழக்கில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமார் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் லட்சக்கணக்கில் வாக்காளா் பெயா்கள் நீக்கம் மற்றும் முறைகேடுகள் நடந்தததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, தில்லியில் உள்ள இந்திய அரசியலமைப்பு மன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணியாக சென்ற இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஞானேஷ் குமாருக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்தனர்.இந்த வழக்கில் இந்திய தோ்தல் ஆணையம், தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் இதர தோ்தல் ஆணையா்களான சுக்பீா் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோா் எதிா்மனுதாரா்களாகச் சோ்க்கப்பட்டுள்ளனா்.இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்ய பாக்ச்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, “இந்த வழக்கு தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம், தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் இதர தோ்தல் ஆணையா்களான சுக்பீா் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோா் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது.ஏற்கெனவே நிலையில் உள்ள எஸ்.ஐ.ஆர். வழக்குகளுடன் இணைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.ராகுல் காந்தி, காங்கிரஸுக்கு நோட்டீஸ்உச்ச நீதிமன்றத்துக்கு இந்தியா கூட்டணி பேரணியாக வந்ததை குறிப்பிட்டு, நீதிமன்ற வளாகத்துக்குள் அரசியல் பேரணிகளுக்கு தடை விதிக்கக் கோரியும், தலைமை நீதிபதிக்கு எதிராக கேரள காங்கிரஸ் பதிவிட்டதற்கு அவமதிப்பு நடவடிக்கை கோரியும் நான்கு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனு விசாரிக்கப்பட்டது.அப்போது பேசிய தலைமை நீதிபதி, “நீதித்துறையை யாராலும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது. நாங்கள் கோபுரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கவில்லை. நீதிமன்றத்துக்கு வெளியே என்னென்ன கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள், நீதிமன்றத்திற்குள் என்ன பேசுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்” என்றார்.நீதிபதி பாக்ச்சி, “நீதிமன்ற வளாகத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். குற்றவியல் அவமதிப்பு தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் இதுபோன்றதொரு சம்பவம் மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது” என்றார்.தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, ”இப்போதைக்கு அவமதிப்பு நடவடிக்கை இல்லை. நாங்கள் நோட்டீஸ் மட்டுமே அனுப்புகிறோம். அவர்களின் பதில் என்னவென்று பார்ப்போம், அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுத்துக்கொள்வோம்” என்றார்.S.I.R. case! Supreme Court issues notice to Gyanesh Kumar!முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!