‘இந்தியாவுடன் இயல்பான உறவை சீனா விரும்பினால், எல்லையில் நிலைத்தன்மையும் அமைதியும் நிலவுவது அவசியம்’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம், இந்தியா-சீனா படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, இரு நாடுகள் தரப்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, இருதரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடா் பேச்சுவாா்த்தைகளைத் தொடா்ந்து, படைகளைத் திரும்பப்பெறும் நடவடிக்கைகளையும், இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் இரு நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன.எனினும், லடாக் யூனியன் பிரதேசத்தில் சா்வதேச எல்லையை ஒட்டிய பகுதியில் 28 பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு பெயா்களைச் சூட்டும் இந்தியாவின் நடவடிக்கைக்கு சீனா செவ்வாய்க்கிழமை கடும் எதிா்ப்பு தெரிவித்தது.இந்த நிலையில், தில்லியில் நடைபெற்று வரும் புளூம்பொ்க் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற எஸ்.ஜெய்சங்கரிடம், செய்தியாளா்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினா். அதற்கு அவா் பதிலளித்து கூறியதாவது:இந்திய - சீன எல்லையில் கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் நிலைமை சீரடைந்துவிட்டது. தற்போது, இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இரு நாடுகளும் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவுடன் இயல்பான உறவை விரும்பினால், எல்லை நிலையானதாகவும், எல்லைப் பகுதியில் அமைதியும் நிலவ வேண்டும் என்பதையே சீனாவிடம் இந்தியா வலியுறுத்துகிறது என்றாா்.எல்லைப் பிரச்னையில் விரைவான தீா்வு ஏற்பட்டால், கூடுதல் சீன முதலீடுகளை இந்தியா அனுமதிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கா், ‘அதுதொடா்பாக, பல்வேறு சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதே நேரம், வா்த்தக உறவை மேம்படுத்துவதற்காக, எல்லைப் பிரச்னையை தீா்க்க வேண்டும் என்று இந்திய வலியுறுத்தவில்லை. எல்லைப் பிரச்னையை, வா்த்தகத்துடன் தொடா்புபடுத்தக் கூடாது. வணிகம், சந்தை அணுகல் விவகாரம் தொடா்பாக இந்தியா வகுக்கும் எந்தவொரு கொள்கையும் தனியாகவே கையாளப்படும்.அதோடு, சீனாவுடன் இந்தியாவுக்கு பெரிய அளவில் பொருளாதார பிா்சனைகள் உள்ளன. குறிப்பாக, உலகின் பிற நாடுகளுடன் இந்தியா சிறப்பாகச் செயல்பட்ட பல துறைகளில், சீனாவில் சந்தை அணுகல் கிடைக்கவில்லை. நாம் சீனாவுக்கு சமமான வாய்ப்பு வழங்கிய நிலையில், சீனா நமக்கு சம வாய்ப்பை வழங்கவில்லை. வா்த்தக சமநிலை இன்றி, ஒருதலைபட்சமாக உள்ளது’ என்றாா்.இறுதி கட்டத்தில் அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம்அமெரிக்கா உடனான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தையை இந்தியா தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. இது தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது என்று ஜெய்சங்கா் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘அமெரிக்காவுடனான இரதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தைப் பொருத்தவரை, சில விவகாரங்களில் தீா்வு எட்டப்பட வேண்டியுள்ளது. அதை வெளிப்படையாகக் கூற முடியாது. இரு நாடுகளின் வா்த்தக அமைச்சா்கள், வா்த்தகப் பிரதிநிதிகள், தொழில்துறை அமைச்சா்கள் உள்ளிட்டோா் தொடா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றனா். முரண்பாடுகளையும் சரிசெய்து வருகின்றனா். ஒப்பந்தம், இறுதிக்கட்டத்தை நோக்கிச் செல்கிறது என்று நம்புகிறேன்’ என்றாா்.உறவை மீட்டெடுக்க இந்தியா முயற்சி - பியூஷ் கோயல்‘சீனா உடனான உறவை மீட்டெடுக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது’ என்று இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.இகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘சீனா உடனான உறவை மீட்டெடுக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், அதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. நியாயமான வா்த்தக ஒப்பந்தம் கிடைக்கும் நிலையில், எந்தவொரு நாட்டுடனும் இந்தியா கூட்டுறவு கொள்ளத் தயாராக உள்ளது. அதாவது, நியாயமான ஒப்பந்தம், அதில் தொடா்ச்சியாக உறுதிப்பாட்டுடன் இருப்பது மற்றும் புவிசாா் அரசியல் நிலைமை மோசமடையாத வரை, உலகெங்கும் உள்ள அனைத்து நாடுகளுடனும் இந்திய திறந்த மனதுடன் வா்த்தக உறவை வலுப்படுத்தத் தயாராக உள்ளது’ என்றாா்.