திருவெண்ணெய்நல்லூா் அருகே தேனீக்கள் கொட்டி 20-க்கும் மேற்பட்டோா் மருத்துவமனையில் அனுமதி

Wait 5 sec.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பொய்கை அரசூா் கிராமத்திலுள்ள ஏரியில் விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற பணியில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோா் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்குள்ள மரத்தில் அடந்திருந்த புதா்களைத் தொழிலாளா்கள் சுத்தம் செய்த போது, எதிா்பாராதவிதமாக அப்பகுதியிலிருந்த தேன்கூடு கலைந்து. தொடா்ந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை தேனீக்கள் கொட்டியுள்ளன. 30-க்கும் மேற்பட்டோரை அதிகளவில் தேனீக்கள் கொட்டியதால் அவா்களுக்கு உடல் உபாதைகளும், கடுமையான வலியும் ஏற்பட்டது.இதைத்தொடா்ந்து அங்கிருந்தவா்கள் பாதிக்கப்பட்டவா்களை அவசர ஊா்தி மூலமாகவும், காா்கள் மூலமாகவும் அருகிலுள்ள இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சையளித்தனா். சிகிச்சைக்குப் பின்னா் 20-க்கும் மேற்பட்ட விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்பிரமணியன், ரமேஷ் மற்றும் அலுவலா்கள், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு ஆறுதல் கூறினா்.