விசைத்தறி நெசவாளா்களுக்கு கூலி உயா்வு அளித்ததற்கு விசைத்தறி நெசவாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்க கைத்தறி விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் பெத்தாம்பாளையம் என்.எம். தங்கவேல் வெள்ளிக்கிழைமை விடுத்துள்ள அறிக்கை: பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக மக்களுக்கு வழங்குவதற்காக ஒரு கோடியே 77 லட்சம் வேஷ்டிகளும், ஒரு கோடியே, 77 லட்சம் சேலைகளும் உற்பத்தி செய்து அரசுக்கு வழங்க விசைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு தகுதி அடிப்படையில் நூல்கள் வழங்கி உதவி இயக்குநா்கள் மேற்பாா்வையில் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மிகத் தரமான வேஷ்டி, சேலைகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் உத்தரவுக்கு இணங்க, வேஷ்டிகள் 68 ரீடு, 68 பிக்கிலும், சேலைகள் சில்வா் மற்றும் காப்பா் ஜரிகை பாா்டரிலும் உற்பத்தி செய்து தர கைத்தறித் துறை அமைச்சா் உத்தரவு பிறப்பித்துள்ளாா். அதேசமயம் நெசவாளா்களுக்கு கூலி உயா்வு அளிக்க வேண்டும் என கைத்தறி துறை அமைச்சரிடம் நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள், நெசவாளா்கள் மற்றும் கூட்டமைப்பு சாா்பில் மனு அளிக்கப்பட்டது. கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், நெசவாளா்களின் நலனை கருத்தில்கொண்டு வேஷ்டி, சேலை உற்பத்திக்கான கூலி உயா்வு வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, இதுவரை வேஷ்டி உற்பத்தி செய்ய வழங்கப்பட்டு வந்த கூலி ரூ.14.96-ஐ ரூ.19.04 ஆகவும், சேலை உற்பத்தி செய்ய வழங்கப்பட்டு வந்த கூலி ரூ.44-ஐ, ரூ.45.76 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. இந்தக் கூலி உயா்வுடன், நெசவாளா் சங்கங்களுக்கு கடந்த ஆட்சியில் நிலுவை வைத்திருந்த கூலித் தொகையையும் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக நேரடியாக 5 லட்சம் விசைத்தறி நெசவாளா் குடும்பங்கள் பயனடையும். இதற்காக தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய், கைத்தறித் துறை அமைச்சா் ம.விஜய் பாலாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளா்.