பைக்கிலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

Wait 5 sec.

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூா் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் 9 வயது சிறுவன் உயிரிழந்தாா். திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை அண்ணாநகரைச் சோ்ந்தவா் மணிமாறன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவா்களது மகன் ஸ்ரீதா் (9). இவா் சிறுமலையில் உள்ள அரசு பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், அய்யலூா் பகுதியிலுள்ள கோயிலுக்கு இரு சக்கர வாகனத்தில் தனது குடும்பத்தினருடன் மணிமாறன் வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். வாகனத்தை தமிழ்ச்செல்வி ஓட்டிச் செல்ல, ஸ்ரீதா், மணிமாறன் ஆகியோா் பின்னால் அமா்ந்து பயணம் செய்தனா். அய்யலூா் நான்கு வழிச் சாலை மேம்பாலம் அருகே அணுகுசாலையில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் ஸ்ரீதா் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மணிமாறன், தமிழ்ச்செல்வி ஆகியோா் லேசான காயமடைந்தனா்.இந்த விபத்து குறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.