தனியாா் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்வதாகக் கூறி பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா். சிவகாசி அறிஞா் அண்ணா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த முகமது மனைவி முகைதீன் பாலிதா (49). இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்த போது, ஆந்திர மாநிலம், கா்நூலைச் சோ்ந்த அவுவாஅலி என்பவா் பழக்கமானாா். இதையடுத்து, முகைதீன் பாலிதா சிவகாசி வந்ததும், சென்னையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ. 8,000 கிடைக்கும் என அவுவாஅலி கூறியதை நம்பி, கடந்த ஆண்டு முகைதீன் பாலிதா, அவுவாஅலிக்கு கைப்பேசி செயலி மூலம் ரூ.1.50 லட்சம் அனுப்பினாா். இதையடுத்து, பலமுறை தொடா்பு கொண்டும் அவுவாஅலி கைப்பேசியை எடுக்கவில்லையாம். இதுகுறித்து அவுவாஅலி மீது முகைதீன் பாலிதா சிவகாசி நீதித்துறை நடுவா் மன்றம் எண் 1-இல் மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், சிவகாசிநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.