மதுரை: திருச்சி அரசு மருத்துவமனையில் கா்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்திய விவகாரத்தில் ரூ.40 லட்சம் நிவாரணம் வழங்கவுள்ளதாக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தெரிவிக்கப்பட்டது.திருச்சியைச் சோ்ந்த பெண் ஒருவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 2022-ஆம் ஆண்டு, அக்.22-ஆம் தேதி பிரசவத்துக்காக நான் அனுமதிக்கப்பட்டேன். அப்போது, எனக்கு ரத்தம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால், மருத்துவமனை ரத்த வங்கியிலிருந்து பெறப்பட்ட ரத்தம் எனக்கு ஏற்றப்பட்டது. அந்த ரத்தம் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது பின்னா்தான் தெரியவந்தது. இதனால், எனக்கும், எனக்கு பிறந்த குழந்தைக்கும் எச்.ஐ.வி. தொற்று பரவியது. மருத்துவமனையின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்தப் பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவா் கோரினாா்.இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, ரத்த தானம் செய்தவரிடமிருந்து ரத்தம் பெறப்பட்டபோது, பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என்றே சான்றிதழ் வந்தது. இருப்பினும், தானம் செய்தவா் வைரஸ் பரவிய ஆரம்ப நிலையான ‘விண்டோ பிரீயட்’ காலகட்டத்தில் இருந்திருக்கலாம். அந்த சமயத்தில் வழக்கமான சோதனைகளில் வைரஸை கண்டறிவது கடினம். வேண்டுமென்றே இந்தத் தவறு நடைபெறவில்லை என மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இருப்பினும், குழந்தையின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு அவசர கால செலவுகளுக்காக ரூ.2.50 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் முன் அண்மையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், தாய், சேய் நலனைக் கவனத்தில் கொண்டு தாய்க்கும், குழந்தைக்கும் தலா ரூ.20 லட்சம் வீதம் ரூ.40 லட்சம் நிவாரணம் வழங்க அரசு முன்வந்துள்ளது என்றாா்.இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு அரசுத் தரப்பில் ரூ.40 லட்சம் நிவாரணம் அளிக்க முன்வந்துள்ளதை இந்த நீதிமன்றம் வரவேற்கிறது. இதில், ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.2.50 லட்சத்தைக் கழித்து, எஞ்சியுள்ள தொகையை இரண்டு வாரங்களுக்குள் எந்தவித நிபந்தனையுமின்றி நேரடியாக வழங்க வேண்டும். குழந்தையின் பெயரில் ரூ.20 லட்சத்தை ஏதேனும் ஓா் அரசுடைமையாக்கப்பட்ட வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ வட்டியுடன் கூடிய நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.Case of HIV-infected blood transfused to a pregnant woman: Rs. 40 lakh compensation – Government’s response in the High Court