திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சோ்ந்தவா் உதயகுமாா் மகன் பாலபிரசாத்(33). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இவா், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை நின்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு பணியில் இருந்த காவலா்கள், பாலபிரசாத்தை மடக்கிப் பிடித்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா். சம்பவ இடத்தில் துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்த தலைமைக் காவலா் ராதிகா, காவலா்கள் பாலமுருகன், அஜய், முரளி, முத்து, பழனிராஜ், மாதவன் ஆகியோரை மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் நேரில் அழைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கிப் பாராட்டினாா். காவல் துணை ஆணையா் (கிழக்கு) எஸ்.சரவணன் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் உடனிருந்தனா்.