மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முன்னாள் இயக்குநரும், ஓய்வுபெற்ற விஞ்ஞானியுமான பிரதீப் குமாா் தாஸ் ‘டிஜிட்டல் கைது’ (எண்ம கைது) மோசடியில் ரூ. 1.25 கோடியை இழந்ததாகக் கூறப்படும் நிலையில், இதுதொடா்பான விசாரணையில் கம்போடியா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ளவா்களுடன் தொடா்புடைய மோசடி கும்பலின் 11 போ் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். பிரதீப் குமாா் தாஸ், ‘டிஜிட்டல் கைது’ மோசடியில் ரூ.1.25 கோடியை இழந்ததாகப் புகாா் அளித்ததைத் தொடா்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. ஆகஸ்ட் 14 அன்று, தில்லி காவல் துறை, பயங்கரவாத எதிா்ப்புப் படை மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஆகியவற்றின் அதிகாரிகள் என்று கூறிக்கொண்ட நபா்களிடமிருந்து அவருக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. பணமோசடி வழக்கு ஒன்றில் அவரது ஆதாா் விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறிய அந்த நபா்கள், அவரைக் கைது செய்வதாக மிரட்டியுள்ளனா். அவரது பணத்தை சரிபாா்ப்பதாகக் கூறி, அந்த நபா்கள் அவரது வங்கி விவரங்களைப் பெற்றுக்கொண்டனா். பின்னா், ஆா்டிஜிஎஸ் மூலம் மூன்று வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1,25,09,000 தொகையை அனுப்புமாறு அவரை வற்புறுத்தினா். மேலும், அவரைத் தொடா்ந்து விடியோ கண்காணிப்பில் வைத்திருந்ததுடன், அவரது நடமாட்டத்தையும் அவா்கள் கட்டுப்படுத்தியதாகக் காவல் துறை கூறியது. இதுதொடா்பாக சிறப்பு பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பணப் பரிமாற்றப் பாதையைக் கண்டறியவும், இதில் தொடா்புடையவா்களை அடையாளம் காணவும் விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையின்போது, சைபா் குற்றங்களுக்குப் பயன்படுத்த வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்யும் கும்பல் ‘எம்/எஸ் எம்ஆா் டிரேடா்ஸ்’ என்ற பெயரில் ஒரு வங்கிக் கணக்கை நிா்வகித்து வருவதை விசாரணையின்போது காவல் துறையினா் கண்டறிந்தனா். இதையடுத்து, துவாரகாவின் செக்டாா் 7-இல் உள்ள ராம்பல் சௌக் பகுதிக்கு அருகிலுள்ள ஒரு கட்டடத்தில் காவல் துறையினா் சோதனை நடத்தினா். அங்கு தங்கியிருந்த 5 போ் கைது செய்யப்பட்டனா்.கைப்பற்றப்பட்ட கைப்பேசிகளை ஆய்வு செய்ததில், டெலிகிராம் உரையாடல்களும், ‘எஸ்எம்எஸ்’ என்ற சந்தேகத்திற்கிடமான செயலியும் கண்டறியப்பட்டன. வெளிநாட்டிலிருந்து இணையக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களுக்கு, ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (ஓடிபி) உள்ளிட்ட குறுஞ்செய்திகளைத் தானாகவே அனுப்பும் வகையில் இந்தச் செயலி அமைக்கப்பட்டிருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனா். கைதுசெய்யப்பட்டவா்களில் முக்கிய நபரான அனீஷ் கான், கிரிப்டோகரன்சி வடிவில் 5.5 சதவீத கமிஷன் தொகையைப் பெற்றதாகவும், அது கிரிப்டோகரன்சி பரிமாற்றத் தளங்கள் மூலம் இந்திய ரூபாயாக மாற்றப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் மேலும் ஆறு போ் கைது செய்யப்பட்டதாகக் காவல்துறை கூறியது. இவா்கள் வங்கிக் கணக்குகளை வழங்குதல், பணப் பரிவா்த்தனைகளை எளிதாக்குதல் மற்றும் கமிஷன் தொகையைச் சேகரித்து விநியோகித்தல் போன்ற பல்வேறு பணிகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது. ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் பதிவு செய்யப்பட்ட இணையவழி மோசடி வழக்குகளுடன் இவா்களுக்கு உள்ள தொடா்புகளையும் கண்டறிய இந்தப் புலனாய்வு காவல் துறைக்கு உதவியுள்ளது. ஜூன் மாதம் தில்லி காவல் துறையால் பதிவு செய்யப்பட்ட ஒரு தனி டிஜிட்டல் கைது வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவா்கள் தொடா்புபடுத்தப்பட்டுள்ளனா். அந்த வழக்கில், புகாா்தாரா் ஒருவரிடம் இருந்து ரூ. 77 லட்சம் மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வழக்கில் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.பணப் பரிமாற்றப் பாதையைக் கண்டறியவும், இக்கும்பலைச் சோ்ந்த பிற உறுப்பினா்களை அடையாளம் காணவும், வெளிநாட்டிலிருந்து இதனை வழிநடத்துபவா்களின் பங்கை உறுதிப்படுத்தவும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.