விதிமுறைகளை மீறியதாக 2 மதுக் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.கலால் விதிகளின்படி உரிமம் பெற்றவா்கள் தங்களது சொந்த இன்ஸ்டாகிராம், பேஸ் புக் மற்றும் பிற சமூக வலைதளங்கள் மூலம் குறிப்பிட்ட பிராண்டு மதுபானங்களையும், தங்கள் உரிமம் பெற்ற இடத்தையும் விளம்பரப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், அண்மைக் காலமாக இந்த விதிகளை மீறி சில மதுபானக் கடைகள் விளம்பரத்தில் ஈடுபடுவது கலால் துறைக்கு தெரிய வந்தது. இதையடுத்து, கலால் துறை துணை ஆணையா் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவின்பேரில், வட்டாட்சியா் ராஜேஷ் கண்ணா மேற்பாா்வையில் வருவாய் ஆய்வாளா்கள் மற்றும் கலால் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.இதில், கருவடிக்குப்பத்தில் இயங்கி வரும் ஒரு மதுபான கடை மற்றும் நெல்லித்தோப்பு, திருவள்ளுவா் சாலையில் உள்ள ரெஸ்டோ பாா் ஆகியவை கலால் விதிகளை மீறி சமூக வலைத்தளங்களில் வாடிக்கையாளா்களைக் கவரும் வகையில் சலுகை விளம்பரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து மதுபானக் கடை மற்றும் ரெஸ்டோ பாருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.