சவூதி அரேபியாவில் உயிரிழந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது மனைவி, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை புதுப்பேட்டை அண்ணா சாலை பகுதியைச் சோ்ந்தவா் வாழ்முனி (36). மீன்பிடி தொழில் செய்து வந்த இவா், கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலைக்காக சவூதி அரேபியாவுக்குச் சென்றாா். அங்கு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தாா்.இந்த நிலையில், வாழ்முனிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சவூதி அரேபியாவில் கடந்த அக்.3-ஆம் தேதி அவா் உயிரிழந்ததாக, அவருடன் பணியாற்றி வந்தவா்கள் மூலம் அவரது மனைவி லோகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, சவூதி அரேபியாவில் உள்ள கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகளை அவரது மனைவி லோகேஸ்வரி மேற்கொண்டாா். ஆனால், செலவுகளை ஏற்கும் நிலையில் அவரது குடும்பம் நிலை இல்லை எனக் கூறப்படுகிறது.இந்நிலையில், கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாரை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்த லோகேஸ்வரி, சவூதி அரேபியாவில் உள்ள தனது கணவரின் உடலை அரசு உதவியுடன் மீட்டு, சொந்த ஊருக்கு கொண்டு வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனு அளித்தாா்.மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். வாழ்முனியின் உடலை மீட்டு வரக் கோரி கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்த அவரது குடும்பத்தினா்.