நீதியின் பெரு நிழல் - நவநீதம் பிள்ளை

Wait 5 sec.

அக்டோபர் 9 அன்று ஆஸ்லோவிலிருந்து வந்த செய்தியைக் கேட்டதும் எனக்குள் பெருமிதம் வந்தது. தமிழ் மரபில் வந்த நவநீதம் நவி பிள்ளைக்கு, உலகின் உயரிய அமைதிப் பரிசான நோபல் அறிவிக்கப்பட்டிருந்தது. அமைதியையும் பன்னாட்டுச் சட்டத்தையும் முன்னெடுத்த முயற்சிகளுக்காக இந்தப் பரிசு என்று நோபல் குழு குறிப்பிட்டது. செய்தி வந்தபோது அவர் ஜெர்மனியின் நியூரம்பெர்க் நகரில் இருந்தார். இது ஒரு தனி மனிதரின் வெற்றி மட்டுமன்று; தமிழர் வரலாற்றின் மறைக்கப்பட்ட இருண்ட பகுதிக்கு கிடைத்த வெளிச்சம். அதைப் பெருமையுடன் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.2019-ஆம் ஆண்டு சிகாகோவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற்றது. ஆய்வாளராகப் பங்கேற்ற நான், தங்கை புஷ்பராணி வழியாக நவிப் பிள்ளையைச் சந்தித்தேன். முள்ளிவாய்க்காலுக்கு நீதி கேட்டு அந்த இரு பெண் போராளிகளும் நடத்திய போராட்டங்களை நான் அறிவேன். அந்தச் சந்திப்பு எனக்குப் பெருமிதம் தந்தது; அதே நேரத்தில், ஒரு கேள்வியும் என் மனத்தில் தங்கியது.கண்டங்களையும் தலைமுறைகளையும் கடந்து வாழும் இவரிடம், 'பிள்ளை' என்ற ஜாதிப் பெயர் இன்னும் உயிருடன் இருப்பது எப்படி? அதற்கு அவரே விடை அவரிடமே கிடைத்தது. 'இது எங்கள் ஜாதிப் பெயர் இல்லை; நாங்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்றே எங்களுக்குத் தெரியாது.' அந்த ஒரு வாக்கியம், என்னை ஆவணங்களின் பக்கம் திருப்பியது.19, 20-ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில், பிரித்தானியக் காலனி ஆட்சி இந்தியர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாகக் கடல் கடந்து கொண்டு சென்றது. ஒப்பந்தப் பத்திரத்தை பிரிட்டிஷார் 'அக்ரிமென்ட்' என்றழைத்தனர். ஆங்கிலம் அறியாத எளிய மக்கள் அதை 'கிரிமித்' என்று உச்சரித்தனர்; கையொப்பமோ, விரல்ரேகையோ இட்டவர்கள் 'கிரிமிட்டியாக்கள்' ஆனார்கள். ஒரு சொல் ஒரு தலைமுறையின் அடையாளமாக, முகவரியற்ற எளிய மக்களின் வாழ்வின் குறியீடாக மாறிய கதை இது.பிரித்தானிய அதிகாரிகளுக்குத் தமிழ்ச் சமூகத்தின் நுட்பமான ஜாதி அடுக்குகள் புரியவில்லை. பிள்ளை, செட்டியார், நாயுடு போன்ற சில பொதுப் பெயர்களே அவர்களுக்குத் தெரிந்திருந்தன. கப்பலில் வந்தவர்களைக் குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பொதுப் பெயரைச் சூட்டினர். அப்படிச் சூட்டப்பட்ட ஒரு பெயரே நவி பிள்ளையின் குடும்பப் பெயராக நிலைத்திருக்கக்கூடும் என்ற முடிவுக்கு என் ஆய்வு என்னை அழைத்துச் சென்றது.பதிவேடு என்பது அதிகாரத்தின் மொழி. ஒருவருக்கு எப்படிப் பெயரிடுகிறோமோ, அப்படியே அவரை நடத்தவும் தொடங்குகிறோம். பதிவேட்டில் ஒரு சொல் எழுதப்படும்போது, அதை எழுதியவர் மறைந்து விடுகிறார்; எழுதப்பட்டவர் அதைச் சுமந்து வாழ்கிறார். பெயரைப் பறித்த காலனியம், அந்த மக்களின் உழைப்பையும் உறுதியையும் பறிக்க முடியவில்லை என்பதற்கு நவி பிள்ளையின் வாழ்வே சான்று.அன்றைய வாழ்க்கை எளிதானதல்ல. சொற்ப கூலிக்கு 12 முதல் 14 மணி நேரத்துக்கும் மேலாக உழைக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர்; 'கூலிகளின் லயன்கள்' என்ற குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டனர். நவி பிள்ளையின் தாத்தாவும் பாட்டியும் தமிழ்நாட்டிலிருந்து சென்ற அந்தக் கூலித் தொழிலாளர்களில் அடங்குவர். அதிகாரத்தால் வெட்டி எறியப்பட்டாலும், ஈரமான மண்ணைத் தேடிக் கண்டடையும் ஆதி வேர்களிலிருந்து, தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நவி பிள்ளை பிறந்தார். மொத்தம் எட்டு பிள்ளைகள் கொண்ட இவரது குடும்பத்தில், இவர் ஐந்தாவது பிள்ளையாவார்.அந்தக் குழந்தையை, சிறு வயதிலேயே வறுமையும் நிறவெறியும் சூழ்ந்துகொண்டன. சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் தென்னாப்பிரிக்கக் கல்வி நிலையங்களில் சகித்துக் கொள்ள முடியாத நிறவெறி நிலவியது. உயர் கல்வித் தடைச் சட்டம் 1959-இல் உருவாக்கப்பட்டது. ஜோகன்னஸ்பர்க், கேப்டவுன் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கருப்பின மாணவர்கள் சேருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.கருப்பின மக்களுக்கென்று தனியாகவும் பிராந்திய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. இந்தக் கல்வி நிறுவனங்களுக்கு குறைவான நிதியை அரசு ஒதுக்கியது. வெள்ளை நிறமற்ற மாணவர்கள் வெள்ளை நிறத்தவருடன் சேர்ந்து படிக்க அனுமதிக்கப்படவில்லை.வெள்ளையர் அல்லாத மாணவர்கள் வளாகத்தின் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டிருந்தனர். கல்வி நிறுவனங்களில் பட்டமளிப்பு விழாக்கள்கூட அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மேடையில் நடத்தப்படவில்லை. நவி பிள்ளையின் போராட்டம் இங்கிருந்துதான் தொடங்கியது. அவரை இன ஒதுக்கலுக்கு எதிரானப் போராளியாக மாற்றியது.வழக்குரைஞர் பட்டம் பெற்ற பின்னரும், எந்தச் சட்ட நிறுவனமும் அவரை ஏற்கவில்லை. ஒரு கருப்பினத்தவர் என்பதால், நீதிபதியின் அறையில் அவரைச் சந்திக்கும் உரிமைகூட அவருக்கு இல்லை. அதிகாரத்தின் தடைகள் அவர் பாதையில் இருந்தன; அவர் சோர்ந்து விடவில்லை; தமக்கென சட்ட நிறுவனம் ஒன்றை உருவாக்கிக் கொண்டார்.தென்னாப்பிரிக்காவின் அட்லாண்டிக் பெருங்கடலில் சிறிய புள்ளியாகத் தெரிந்த ராபன் தீவு, 1960-க்குப் பிறகு நிறவெறிக்கு எதிராகப் போராடியவர்களின் சிறையாகியது. நெல்சன் மண்டேலா அங்கே 18 ஆண்டுகள் இருந்தார்; அவர் சிறையிலிருந்த மொத்த ஆண்டுகள் இருபத்தேழு. அங்கு அடைக்கப்பட்ட கைதிகளின் உரிமைகளுக்காக சட்டவழிப் போராட்டங்களை நவி பிள்ளை துணிச்சலுடன் முன்னெடுத்தார். நீதிபதியின் அறைக்குள் நுழையவும் மறுக்கப்பட்டவர், இனவெறி ஆட்சி முடிந்த பிறகு அந்த இருக்கையிலேயே அமர்ந்தார். தென்னாப்பிரிக்க உயர்நீதிமன்றத்தின் முதல் கருப்பினப் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைவராக இவர் ஆற்றிய பணியும் வரலாற்றுச் சிறப்புமிக்கது. பாலியல் வன்முறைகளும் இனப் படுகொலைக்கான போர்க்குற்றங்களே என்ற சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கினார். தொடர்ந்து பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திலும் பணியாற்றி, 2008 முதல் 2014 வரை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையராகச் செயல்பட்டார்; வல்லரசுகளின் அழுத்தத்துக்குப் பணியாமல் உலக நாடுகளின் மீறல்களை வெளிப்படையாக விமர்சித்தார்.ஈழத் தமிழர்களுக்காக உலக அரங்கில் ஒலித்த வலுவான குரல்களில் அவருடையதும் ஒன்று. இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போதும் அதற்குப் பிந்தைய காலத்திலும் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்களை வெளிப்படுத்த அவர் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றில் பதிந்துவிட்டது. முள்ளிவாய்க்காலில் போர் முடிந்த சில நாள்களிலேயே, 2009 மே மாதம், பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்துச் சுதந்திரமான, நம்பகமான சர்வதேச விசாரணை வேண்டும் என்றவர் நவி பிள்ளை. ஐ.நா. மனித உரிமை ஆணையாளராகப் பதவியில் இருந்தபோது, போர் முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 2013 ஆகஸ்ட்டில் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளுக்கு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்றார். இலங்கை அரசும் அதன் ஊடகங்களும் கடும் அவதூறுகளைக் கட்டவிழ்த்து விட்டன. அவற்றைப் பொருட்படுத்தாமல் கள நிலவரங்களை அவர் நேரில் பார்வையிட்டார்.போருக்குப் பிறகு இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு விசாரணை பெயரளவில் மட்டுமே இருப்பதாகவும், உண்மையான பொறுப்புக்கூறல் எட்டப்படவில்லை என்றும் அது சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்றை உருவாக்கினார். இதன் அடிப்படையிலேயே, போர்க்குற்றங்களை விசாரிக்க, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அதிகாரபூர்வ சர்வதேச விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட்டது.நோபல் பரிசு அறிவிப்பு வந்தபோது, அவர் தம் பரிசை சர்வதேசக் குற்றங்களில் உயிர் பிழைத்தவர்களுக்கு அர்ப்பணித்தார். சர்வதேசக் குற்றவியல் நீதியைக் காக்கப் போராடுவோரையும் அதில் இணைத்துக் கொண்ட அவர், ''அவர்களின் இரக்கமும் துணிவுமே, குற்றம் இழைத்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை தொடராமல் தடுக்கின்றன'' என்று கூறினார். அசாதாரண துணிச்சலுடனும் நேர்மையுடனும் விரிவான உலகச் சட்ட ஒழுங்கை நோக்கி வழிகாட்டியவர் என்று நோபல் குழு அவரைப் பாராட்டியது.ஆனால், இந்தப் பரிசு எதிர்ப்பின்றி வரவில்லை. இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகமும் சில யூத அமைப்புகளும் இதைக் கடுமையாகக் கண்டித்தன. தீய நோக்கத்துடன் கேள்வியை எழுப்புகிறவர்களுக்கு அவருடைய தீர்ப்புகளும் அறிக்கைகளுமே விடை சொல்லும்.85 வயதில், தென்னாப்பிரிக்காவிலிருந்து அமைதிக்கான நோபல் பரிசு பெறும் ஐந்தாவது ஆளுமையாக டூட்டு, மண்டேலா போன்றோரின் வரிசையில் அவர் நிற்கிறார். அன்று துயரக் கடலில் பெயரிழந்து அலைக்கழிக்கப்பட்ட ஒரு கிரிமித் தொழிலாளியின் வேரிலிருந்து, இன்று உலக நீதியின் நிழலாக ஒரு விருட்சம் தலைநிமிர்ந்து நிற்கிறது. இது அவருக்கான வெற்றி மட்டுமல்ல; 'கிரிமித்' வரலாற்றில் பெயரிழந்து மறைந்த ஒவ்வொரு உழைப்பாளிக்கும் கிடைத்த மரியாதை. இதைத் தமிழ்ச் சமூகம் பெருமிதத்துடன் கொண்டாடலாம்.கடல் கடந்து பிறந்து, அங்கேயே வளர்ந்து, தம் மூதாதையரின் நினைவைத் தலைமுறைகளாகச் சுமந்து வாழும் தமிழர்களுக்கு இந்தச் செய்தி ஒரு நம்பிக்கை தருகிறது: வேர்கள் எங்கிருந்தாலும் வீண் போவதில்லை. தமிழ்நாட்டிலும் புவிப்பரப்பெங்கும் வாழும் தமிழர்களும் இந்தச் செய்தியில் பெருமை கொள்கிறார்கள்.இந்தப் பெருமையிலுள்ள போதாமையையும் நாம் உணர வேண்டும். நவி பிள்ளை உருவாக்கிய சர்வதேச விசாரணைப் பொறிமுறை தீர்மானமாக உருவெடுத்து 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. முள்ளிவாய்க்காலுக்கான இந்த நீதிப் பதிவேடு இன்று மறக்கப்பட்டு விட்டது. இன்று, இந்த நோபல் விருதின் பிரகாசத்தில் அந்தக் கேள்வி இன்னும் கூர்மையாகிறது. அந்த நீதி எழுதப்படும் நாளில்தான் இந்தப் பெருமிதம் முழுமை பெறும்.