கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், மருதமலை மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் பெய்த கன மழையால் சுப்பிரமணிய சுவாமி கோயில் படிப்பாதையில் மழைநீர் அருவி போல் பெருக்கெடுத்து ஓடியது. மருதமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை இடைவிடாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்தத் திடீர் கனமழையின் காரணமாக, மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் அதிகளவில் மழைநீர் தேங்கியது. தேங்கிய நீர், மலையிலிருந்து வடிந்து வரத் தொடங்கியதை அடுத்து, கோயிலின் பிரதான ராஜகோபுரப் படிக்கட்டுப் பாதையில் அருவி போல் ஆர்ப்பரித்து வழிந்தோடியது.படிக்கட்டுகளில் வெள்ளம்போல் நீர் பெருக்கெடுத்து ஓடியதால், சுவாமி தரிசனம் முடித்துவிட்டு மலை இறங்க வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்தனர். பாதுகாப்பு கருதிப் பக்தர்கள் அனைவரும் கோயில் மண்டபங்களிலேயே காத்து நின்றனர். பின்னர் மழை நீரின் அளவு குறைந்த பிறகே அவர்கள் பாதுகாப்பாக மலை இறங்கிச் சென்றனர். மருதமலை மட்டுமின்றி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, தொண்டாமுத்தூர், பேரூர், ஆலாந்துறை, சாடிவயல் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாகக் கனமழை பெய்தது. இதனால் விவசாயத் தோட்டங்கள், மேடான பகுதிகள் மற்றும் மலைச் சரிவுகளிலிருந்து அடித்து வரப்பட்ட மழைநீர் பிரதான சாலைகளில் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கோவையில் தொடர்ந்து பெய்து வரும் இந்தத் தீவிர மழையினால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.