பெண்களை உயர்வு செய்த பாரதம்

Wait 5 sec.

பாரத தேசம் முழுவதும் அம்பிகையின் வெற்றியைக் கொண்டாடும் நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களை, பெண்மையைப் போற்றும் சிறப்பு பாரதத்தின் தனித்த அடையாளம். அதன் உன்னதத்தைப் புரிந்து கொண்டால் பாரதத்தின் எதிர்காலமும் சிறப்புப் பெறும்.நவராத்திரியின் கோலாகலக் கொண்டாட்டங்களுக்கு இடையில், உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனால், பெண்கள் நிலை என்றென்றைக்கும் மாற்றமில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும், இந்தியாவில் பெண் என்றைக்கும் மதிப்பற்றவளாக இருக்கிறாள், சமூகத்தில் பெண்கள் இரண்டாம் பட்சமாகவும் அடிமைத்தனத்தோடும் வாழ வேண்டியிருக்கிறது என்றும், ஒரு பெண்மணி பேசிய காணொலியைப் பார்க்க நேர்ந்தது. தன்னுடைய கருத்துக்கு வலு சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு புத்தர் யசோதரை உதாரணத்தை அவர் முன்வைக்கிறார்.பொத்தாம்பொதுவாகப் பொதுவெளியில் இப்படிக் கருத்துச் சொல்வது சரியாக இருக்குமா?, 'என்றென்றைக்கும் மாற்றம் இல்லாமல்' என்பது கால வரையறையே இல்லாததாக இருக்கிறதே?பெண்களின் ஆற்றலுக்கும் சாதனைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பு இல்லை என்று சொல்லிக் கொண்டே இருப்பதற்கான காரணத்தின் பின்னிருக்கும் அரசியலை ஆராய்வது நமது நோக்கம் அல்ல.வரலாறு சாதனையாளர்களைப் பதிவு செய்கிறது; ஆனால், அதில் பெண்களுக்கு இடம் இல்லை என்ற வாதம் ஏற்புடையதல்ல.இளவரசர் சித்தார்த்தர் ஞானத்தைத் தேடி அரண்மனையை விட்டு வெளியேறியதை வெற்றிக்கான தொடக்கமாகப் பார்க்கிறது. அவர் ஞானத்தை நோக்கி அடியெடுத்து வைத்தபோது, யசோதரை நிச்சயமற்ற எதிர்காலத்துக்குள் அடியெடுத்து வைத்தாள். ஆனால், இருவரில் ஒருவரை மட்டுமே வரலாறு நினைவுகூருகிறது. ஆகவே, பெண்கள் பாரத சமூகத்தில் எந்தக் காலத்திலும் மதிக்கப்படுவதில்லை என்ற பொதுவான கருத்தை முன்வைக்கிறார்கள்.புத்தரின் மனைவியும் அவரது மகன் ராகுலனும் புத்தரின் முதன்மைச் சீடர்கள் என்ற அந்தஸ்துடன் புத்தரின் சங்கத்தில் இருந்தனர் என்ற உண்மையை ஏன் மறைக்கிறார்கள்?. புத்தரின் வரலாற்றைப் படித்தவர்கள் இதை அறிந்து கொள்ளாமலா இருந்திருப்பார்கள்?அதே சமூக ஊடகப் பக்கத்தில் இன்னும் சில காணொலிகளில் இந்திய வரலாற்றில் பெண்கள் மிக இழிவாக நடத்தப்பட்டனர் என்ற கருத்தை முன்வைத்து விஜயநகர சாம்ராஜ்ய காலம் இதற்கான சான்று என்றும் சொல்கிறார்கள்.உண்மையில் பாரதத்தில் பெண்கள் ஓரங்கட்டப்பட்டவர்களாக இருந்தனரா?. நாம் நமது வரலாற்றையும் பாரம்பரியத்தையும் படிக்க வேண்டியதன் அவசியத்தை இது போன்ற கருத்துகள் உணர்த்துகின்றன.ஆதிசங்கரர், ஜகத்குருவாக நாடு முழுவதும் பயணித்து தர்மம் நிலைத்து நிற்க ஏற்பாடுகளைச் செய்தவர். பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டி கற்றுக் கொடுத்தவர். துறவு வாழ்க்கை மேற்கொள்கிறவர்கள்கூட தாயைத் துறக்க இயலாது என்று அன்னையை நினைத்து மாத்ருகா பஞ்சகம் பாடியவர்.ஆஸ்தம் தாவதியம் ப்ரஸுதிஸமயே துர்வாரசூலவ்யதா நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸம்வத்ஸரீ!ஏகஸ்யாபி நகர்பபாரபரண க்லேஸஸ்ய யஸ்யாக்ஷம: தாதும் நிஷ்க்ருதி முந்நதோஅபி தனய தஸ்யைஸ்ஜனன்யை நம:!!அம்மா, பிரசவ சமயத்தில் பொறுக்க முடியாத கடுமையான வலியை எனக்காகப் பொறுத்துக் கொண்டாய். என் நலன் கருதி ருசியற்ற உணவை உண்டு உன் உடம்பு வாடி மெலிந்திருக்கும். ஓராண்டு காலம் என் மலம் முதலியவைகளால் படுக்கை நனைந்து உன் தூக்கம் கெட்டிருக்கும்.பிள்ளை என்னதான் உன்னத நிலைக்கு வளர்ந்தாலும் கர்ப்ப காலத்தில் வயிற்றில் சுமந்து தாய் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் ஈடுகட்ட முடியுமா?, பரிகாரம்தான் செய்ய முடியுமா?, இவ்வளவு சிரமங்களையும் பொறுத்துக் கொண்ட அன்னையே நமஸ்காரம். இப்படி இன்னும் நான்கு ஸ்லோகங்களில் வணங்குகிறேன்; நமஸ்கரிக்கிறேன் என்று அன்னையின் தியாகங்களைப் பாடுகிறார்.பெண்களின் தியாகங்களைக் கொண்டாடும் இத்தகைய இலக்கியங்களைப் பெண்ணியம் பேசுவோர் ஏற்பதில்லையே? பெண்களைக் கொண்டாடிய வரலாறுகளைப் படிப்பதில்லையே? ஏன் பெண்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட வரலாறுகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன?பாரத தேசம் முழுவதும் ஏராளமான பெண் எழுத்தாளர்கள் காலந்தோறும் இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்திருக்கின்றனர். இலக்கிய உலகில் வேதம் முதல் சங்க இலக்கியங்கள் தொடங்கி அனைத்திலும் பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.எனில், பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படவில்லை. பொதுவெளியில் இயங்கி வந்திருக்கின்றனர் என்பது வெளிப்படை. விஜயநகர சாம்ராஜ்யம் மிக அதிகமாகப் பெண்களைக் கொண்டாடியது. முகலாய சாம்ராஜ்யம் வலிமையாக எதிரே இருந்த காலத்திலும் பெண்கள் பொதுவெளியில் பெருமதிப்புடன் கொண்டாடப்பட்டனர். இந்த வரலாறுகளை, இலக்கியங்களை நாம் தெரிந்து வைத்திருந்தால் மற்றவர்கள் நம்மைக் குழப்ப முடியாது.ரகுநாத நாயக்கரின் அவைக்களப் புலவர்களில் ஒருவர் மதுரவாணி. பிராகிருதம், தெலுங்கு, சம்ஸ்கிருதம் என மும்மொழிகளில் புலமை பெற்றவர். ரகுநாத நாயக்கர் தெலுங்கில் இயற்றிய ராமாயண திலகத்தை மதுரவாணி சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தார். பாணிணீ இலக்கணத்தின் கரை கண்ட மாமேதை. இசையிலும் வீணை வாசிப்பதிலும் அபாரப் புலமை பெற்றவர். நினைத்த மாத்திரத்தில் கவி புனையும் ஆற்றல் உடையவர் என்பதால், சமகால அறிஞர்கள் இவரை ஆசு கவிதாராணி என்று புகழ்ந்தனர்.மதுரவாணியின் சாதனைகளும் ஆற்றலும் அவர் மொழிபெயர்த்த ராமாயண காவியத்தின் முகவுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அஷ்டாவதானம் அறிந்தவர், சதாவதானம்- அதாவது பலர் முன்னிலையிலும் 100 விஷயங்களை நினைவு வைத்துக் கொண்டு கேட்ட கேள்விகளுக்குப் பதில் கொடுக்கும் வல்லமை மிக்கவர். இவரின் திறமையைப் பாராட்டி மன்னரே வாழ்த்துக்கவி தந்திருக்கிறார்.'சதலேகினி' என்றொரு பட்டம் உண்டு. ஒரு கடிகை எனப்படும் 24 நிமிஷங்களுக்குள் எட்டு மொழிகளில் 100 செய்யுள்களை இயற்றும் வல்லமை கொண்டவர் சதலேகினி. பசுபலேட்டி வேங்கடாத்ரியின் புதல்வி ரங்கஜம்மா ஒரு சதலேகினி. ராமாயண சாரம், பாகவத சாரம், யக்ஷ கான நாடகம் எனப் பல நூல்களை எழுதிப் புகழ் பெற்றவர். ரங்கஜம்மாவின் புலமையைப் பாராட்டி அரசவையில் அவருக்கு கனகாபிஷேகம் செய்யப்பட்டது.பெண்களின் திறமையை, ஆற்றலை இந்த அளவுக்கு அங்கீகரித்த பெருமையை உலகில் எந்த நாட்டிலும் காண முடியாது. பெண்கள் அழகுக்காக அல்லாமல் அவர்களின் திறமைக்காகக் கொண்டாடப்பட்ட வரலாறு பாரதத்தில் மட்டுமே உண்டு.இராமபத்ராம்பா மற்றுமொரு சதலேகினி. ரகுநாத நாயக்கர் (1600-1634) ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அரசியல் மற்றும் ராணுவ நிகழ்வுகளை விவரிக்கும் 'ரகுநாதாப்யுதயம்' என்ற பன்னிரண்டு சருக்கங்களைக் கொண்ட வரலாற்றுக் காவியத்தை சம்ஸ்கிருதத்தில் இயற்றினார். இலக்கியம் என்பதுடன், விஜயநகரப் பேரரசின் வரலாற்றுக்கான முக்கிய ஆதாரமாகவும் இந்த நூல் விளங்குகிறது.'ரகுநாதாப்யுதயம்' காவியத்தின் கடைசி இரண்டு சருக்கங்கள், தஞ்சாவூர் பெண்களின் திறமைகளைப் பட்டியலிடுகின்றன. அவர்கள் எட்டு மொழிகளில் எளிதாகப் பாடல்கள் இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தனர் என்றும், அவர்களில் சிலர் வைசேஷிகத் தத்துவத்தையும் இலக்கணத்தையும் விளக்குவதில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தனர் என்றும் பதிவாகியிருக்கிறது.அச்சுத தேவராயரின் அவைக்களப் புலவர்களில் ஒருவர் திருமலாம்பா, சம்ஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றவர், கவிதையும் உரைநடையும் கலந்த இலக்கிய வடிவத்தின் மீது காதல் கொண்டவர்.195 எழுத்துகளைக் கொண்டு ஒரு சொல்லை எழுதியிருக்கிறார். சிறந்த வாசிப்பும் சம்ஸ்கிருத இலக்கணத்தில் அதீத தேர்ச்சியும் மொழியின் ஆழமும் அறிந்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும்.1999-ஆம் ஆண்டு இலக்கியத்தில் உலகின் மிகப் பெரிய சொல்லுக்கான கின்னஸ் உலக சாதனைக்கான தேடல் திருமலாம்பாவின் புகழையும் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பெருமையையும் வெளிக்கொணர்ந்தது. இதைத் தான் பாரதி, 'புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்சதுமறைப்படி மாந்தர் இருந்த நாள்தன்னிலே பொதுவான வழக்கமாம்;மதுரத் தேமொழி மங்கையர் உண்மை தேர்மாதவப் பெரியோருடன் ஒப்புற்றேமுதுமைக் காலத்தில் வேதங்கள் பேசியமுறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்.'என்று விளக்கினார்.பாரதத்தில் இப்படிப் புகழ்பெற்ற பெண்களின் பட்டியல் இலக்கியத்தில் மட்டுமல்ல, நிர்வாகம் முதலான அனைத்துத் துறைகளிலும் மிகுதியாகவே இருக்கின்றன. ஆனாலும், நமது முன்னோர் பெண்களை அடிமைப்படுத்தியவர்கள் என்ற கதையைத் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள். ஆதாயத்துக்காக அரசியல் செய்வோரின் கதைகளை நம்பி நம் மூதாதையர்களைக் குற்றம் சொல்வது அறிவுடைமை ஆகாது.இன்றைய நிலையில் வரலாறும் இலக்கியமும் பணி வாய்ப்பைத் தராமல் போகலாம். ஆனால், அவைதான் நாம் யார் என்ற அடையாளத்தையும், எத்தகைய பாரம்பரியத்துக்கு சொந்தக்காரர்கள் என்ற உண்மையையும் உணர்த்துகின்றன.