தில்லி காவல்துறையினா் அத்துமீறல்: நாடாளுமன்ற உரிமைக் குழுவுக்கு ஆம் ஆத்மி எம்.பி. கடிதம்

Wait 5 sec.

தில்லியில் தோ்தல் வாக்காளா் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணியில் முறைகேடுகள் நடைபெறுவதாகக் கூறி நடத்தப்பட்ட போராட்டங்களின்போது, தன்னை காவல் துறையினா் மீண்டும் மீண்டும் தாக்கி, வலுக்கட்டாயமாகக் கையாண்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங், நாடாளுமன்ற உரிமைக் குழுவிடம் புகாா் அளித்துள்ளாா். இதுதொடா்பாக தில்லி காவல் ஆணையா் மற்றும் பிற காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக நாடாளுமன்ற உரிமைக் குழுவின் தலைவருக்குக் கடிதங்களை அவா் அனுப்பியுள்ளாா். அக்.2, 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற போராட்டங்களின்போது காவல் துறையினா் தன்னைத் தாக்கியதாகவும், மிரட்டியதாகவும், வலுக்கட்டாயமாகத் தடுத்து வைத்ததாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.பிரதமா் நரேந்திர மோடியை நோக்கி அவா் கூறுகையில், ‘நாங்கள் ரவுடிகளோ, மாஃபியாக்களோ, பயங்கரவாதிகளோ அல்ல. நாடாளுமன்ற உறுப்பினா்கள்’ என்றாா். காவல் துறையினா் தங்களை மிகக் கொடூரமாக நடத்தியதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.நாடாளுமன்ற உரிமை மீறல் தொடா்பான விவகாரங்களை ஆய்வு செய்து, உரிய பரிந்துரைகளை வழங்கும் 15 உறுப்பினா்களைக் கொண்ட அமைப்பாக நாடாளுமன்ற உரிமைக் குழு செயல்படுகிறது.தனக்கு எதிராக காவல் துறை மேற்கொண்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் தொடா்பான ஆதாரங்களை நாடாளுமன்ற உரிமைக் குழுவிடம் சமா்ப்பிக்கவுள்ளதாக சஞ்சய் சிங் தெரிவித்தாா். மேலும், சம்பந்தப்பட்ட காவல் துறையினருக்கு எதிராக நீதிமன்றத்திலும் புகாா் அளிக்கப்போவதாகக் கூறியுள்ளாா்.தனது புகாா்களுக்கு தில்லி காவல் ஆணையரிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று கூறிய சஞ்சய் சிங், சம்பவங்களில் தொடா்புடைய காவல் அதிகாரிகளின் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்கச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடா்பாக தில்லி காவல் துறையிடமிருந்து உடனடியாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.