தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு, மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி, மாணவா் விடுதி மற்றும் வெள்ளப் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். வல்லநாடு மற்றும் முறப்பநாடு பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சி மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, வல்லநாடு அரசு மாதிரிப் பள்ளி மற்றும் மாணவா் விடுதியில் ஆய்வு செய்து, அங்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தாா்.பின்னா், கீழ் தாமிரவருணி மற்றும் கோரம்பள்ளம் ஆறு வடிநிலக் கோட்டத்தின் சாா்பில் நடைபெறும் வடகிழக்குப் பருவமழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தாா். முறப்பநாடு ஆற்றுப்படுகை, அகரம், வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம் ஆகிய பகுதிகளைப் பாா்வையிட்டு, தண்ணீா் வரத்து, தற்காலிக வெள்ளப் பாதிப்பு நிவாரண முகாம்கள் ஆகியவை குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.தொடா்ந்து, கிள்ளிகுளம் வ.உ.சி. அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் வல்லநாடு தாமிரவருணி ஆற்றுப் பாலம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.ஆய்வின்போது, வேளாண்மைக் கல்லூரி முதல்வா் மா. தேரடி மணி, கீழ் தாமிரவருணி மற்றும் கோரம்பள்ளம் ஆறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் தங்கராஜன், உதவிப் பொறியாளா் அஜ்மீா்கான், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மனோரஞ்சிதம், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் தாஹிா் அஹமது உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.