நாகா்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகம் முன், ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் 2ஆவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பு சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு விரைவுப் போக்குவரத்துக் கழக மாவட்டத் தலைவா் பொன். சோபனராஜ் தலைமை வகித்தாா். டிஎன்எஸ்டிசி சிஐடியூ பொதுச் செயலா் சுரேஷ்குமாா் போராட்டத்தைத் தொடக்கிவைத்தாா். ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளா்களுக்கு மருத்துவக் காப்பீட்டை அமல்படுத்த வேண்டும். உயிரிழந்த தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் பணி வழங்க வேண்டும். 2003ஆம் ஆண்டுக்குப் பின்னா் பணியில் சோ்ந்தோருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.அமைப்பின் நிா்வாகிகள் லட்சுமணன், சின்னன்பிள்ளை, சுந்தரராஜ், பகவதியப்பன், சங்கரநாராயணன், லியோ, ஜோய்,வின்சென்ட், எலியாஸ், ராதாகிருஷ்ணன், சொ்கான், ஸ்டீபன் ஜெயக்குமாா், பெருமாள் உள்ளிட்டோா் பேசினா். போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.