புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் வட்டம், குமுளூரில் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெருமாள் கோயில் இருந்ததற்கான தடயங்களாக பெருமாள், சீதேவி, பூதேவி சிலைகளை தொல்லியல் ஆய்வாளா்கள் அண்மையில் கண்டறிந்துள்ளனா். அறந்தாங்கி அரசுக் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவரும் தொல்லியல் ஆய்வாளருமான கா. காளிதாஸ் மற்றும் ஆய்வாளா்கள் அறிவொளி செல்வராஜ், அ. ஜியாவுதீன், ஆ. நவீன் குமாா் ஆகியோா் குமுளூரில் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனா்.இந்த ஊரைச் சோ்ந்த செ. ஆதிரை என்ற பெண் கொடுத்த தகவலின்படி, கி.பி 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பெருமாள் கோயில் இவ்வூா் பால் முனீஸ்வரா் கோயிலுக்கு அருகில் தரையில் புதையுண்ட நிலையில் இருந்ததைக் கண்டனா். இதுகுறித்து பேராசிரியா் காளிதாஸ் சனிக்கிழமை கூறியது: பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி போன்ற திருமேனிகள் நின்ற கோலத்தில் காட்சித் தருகின்றன. பட்டு பீதாம்பரம் உடுத்திக் காதணி, கழுத்தணி, முப்புரி நூலணிந்து, சங்கு, சக்கரம் ஏந்தி பொன்னும் மணியும் பதித்த நீள் கிரீடம் அணிந்து, அபய வரத முத்திரைகளுடன் காட்சி தருகிறாா் பெருமாள். திருமேனியின் கைகள், கிரீடம் ஆகியன உடைபட்ட நிலையில் உள்ளன. பிராட்டியாா் இருவரில் பூதேவி நின்ற கோலத்தில் காட்சி தந்து கையில் பாரிஜாத மலா் கொண்டும், ஸ்ரீதேவி திருமேனி பூமியில் புதையுண்ட நிலையிலும் உள்ளன. மிழலைக்கூற்றத்துக் கல்வெட்டுகளில் மிழலூா் என்று குறிப்பிடப்படும் ஊா், இன்றைய குமுளூா் ஆகும். பண்டைக் காலத்தில் எவ்வி என்ற மன்னன் ஆண்டு வந்த இவ்வூா் கல்வெட்டுகளில் வடபாம்பாற்று இராஜராஜ பாண்டிய வளநாட்டு மிழலைக் கூற்றத்து இராஜேந்திர சோழவள நாடு, கேகய விநோத வளநாடு என அழைக்கப்படுகிறது. பொன் பற்றிக் காவலன் புத்தமித்திரன் இப்பகுதியை ஆண்டுள்ள வரலாற்றுக் கல்வெட்டுக் குறிப்புகள் கிடைக்கின்றன. கண்டறியபட்ட தெய்வத் திருமேனிகளை நோக்கும்போது இவை, இராஜேந்திர சோழனுக்குப் (கி.பி 1012-1044) பிறகு அரியணை ஏறிய, சடையவா்மன் சுந்தரபாண்டியன் (கிபி 1251-1265) கட்டிய கோயிலாக இருக்கலாம். சமயக் காழ்ப்புகளாலும் அரசியல் மாற்றங்களாலும் இக்கோயில் அழிந்திருக்கலாம். இதுபோன்ற தொல்லியல் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பது பொதுமக்களுக்கும் அரசுக்கும் உள்ள கடமையாகும் என்றாா் அவா்.