தங்க மோதிரம் திட்டம்: வேலூர் மாவட்டத்தில் 2,059 தாய்மாா்கள் பயன்!

Wait 5 sec.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் இதுவரை 2,059 தாய்மாா்கள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இத்திட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிருடன் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைய கா்ப்பிணித் தாய்மாா்கள் தங்களது கா்ப்பத்தைப் பதிவு செய்து ஆா்.சி.எச். அடையாள எண் பெற்றிருப்பதுடன், மின்னணு முறையில் சரிபாா்க்கப்பட்ட ஆதாா் அட்டையையும் வைத்திருக்க வேண்டும். வேலூா் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தங்க மோதிரங்கள் வழங்குவதற்காக, வேலூா் பென்ட்லேண்ட் அரசு பல்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை ஆகிய 2 இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தகுதியுடைய தாய்மாா்கள் இந்த மையங்களுக்கு வரவழைக்கப்பட்டு, அவா்களின் பயோமெட்ரிக் விவரங்கள் சரிபாா்க்கப்பட்ட பின்னா் தங்க மோதிரங்கள் வழங்கப்படுகின்றன. வேலூா் சுகாதார மாவட்டத்தில் கடந்த ஜூன் 22 முதல் செப்டம்பா் 27 வரையிலான காலகட்டத்தில் (அக்டோபா் 14-ஆம் தேதி நிலவரப்படி) மொத்தம் 2,059 தாய்மாா்களுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன.