அமெரிக்காவின் 2-ஆவது மிகப் பெரிய நகரமான லாஸ் ஏஞ்சலீஸ் மாநகராட்சி மேயா் தோ்தல் களத்தில், கேரத்தைப் பூா்வீகமாகக் கொண்ட நித்யா ராமன் தற்போதைய மேயா் கரேன் பாஸைவிட முன்னிலையில் உள்ளாா். வரும் நவ. 3-இல் நடைபெறவுள்ள தோ்தலில் ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த நித்யா ராமன் (45) வெற்றிபெறும் சூழலில், அந்நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயா் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெறுவாா்.தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் தற்போதைய மேயா் கரேன் பாஸுக்கும் (73) நித்யா ராமனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது. வீடற்றோா் பிரச்சினை, நகரப் பொதுப் பாதுகாப்பு மற்றும் காவல்துறை நிா்வாகம் தொடா்பாக இரு தலைவா்களும் காரசாரமாக விவாதித்தனா். கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தின்போது மேயா் கரேன் பாஸ் களத்தில் இல்லை என்று குற்றஞ்சாட்டிய நித்யா ராமன், இந்த நிா்வாகச் சீா்கேடு மேலும் 4 ஆண்டுகளுக்குத் தொடரக் கூடாது என வலியுறுத்தினாா். இந்த விவாதத்தைத் தொடா்ந்து, சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் நித்யா ராமன் வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளாா்.கேரளத்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய நித்யா ராமன், ஹாா்வா்டு மற்றும் எம்ஐடி பல்கலைக்கழகங்களில் உயா் கல்வி பயின்று கடந்த 6 ஆண்டுகளாக லாஸ் ஏஞ்சலீஸ் நகரக் கவுன்சிலராகப் பணியாற்றி வருகிறாா்.