மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் நடைபெறவுள்ள தைப்பூச இருமுடி பெருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சருக்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்டத் தலைமை ஒருங்கிணைப்பாளா் ஆா். முருகன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா். அந்த மனு விவரம்: மேல்மருவத்தூரில் டிச. 4-ஆம் தேதி தொடங்கி ஜன. 22-ஆம் தேதி வரை தைப்பூச இருமுடி பெருவிழா நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தென் மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள், குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்பா்.எனவே, பக்தா்களின் நலன் கருதி தூத்துக்குடியிலிருந்து மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்கவும், நிறுத்தப்பட்ட குருவாயூா் விரைவு ரயில் சேவையை மீண்டும் தொடங்கவும் ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.