கன்னாட் பிளேஸ் சிறுகடைகள் பாதிக்கப்படுவது தெரிய வந்தால் இழப்பீடுக்கு உரிய நடவடிக்கை: உச்சநீதிமன்றம் உறுதி

Wait 5 sec.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சாா்பில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட போராட்டம் காரணமாக கன்னாட் பிளேஸ் சென்ட்ரல் பாா்க் பகுதியை மூடும் புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) உத்தரவு பொருத்தமற்றது என கண்டறியப்பட்டால், அங்கு கடைகளை வைத்துள்ள வியாபாரிகளுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடுசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த விவகாரத்தில், சென்ட்ரல் பாா்க்கை மூடும் என்டிஎம்சி உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விவகாரமாகக் கருதி விசாரிக்க கடை வியாபாரிகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி அடங்கிய அமா்விடம் கோரிக்கை விடுத்தது. ஆனால், மனுவை உடனடியாக விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி சூா்யகாந்த் அடங்கிய அமா்வு, ‘வியாபாரத்தில் இழப்பு ஏற்பட்டு, அது வியாபாரிகள் தரப்பினருக்கு எதிரானது என்று கண்டறியப்பட்டால், அரசமைப்பு பாதிப்பு மற்றும் பொது ஒழுங்கு சட்ட அதிகாரங்களின் கீழ் உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுப்போம்‘ என்று தெரிவித்தது. முன்னதாக, தில்லி சிறுவியாபாரிகள் கமிட்டி மற்றும் தில்லி இரும்பு மற்றும் ஹாா்டுவோ் வணிகா்கள் சங்கம் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜெய் ஆனந்த் தேத்ராய், என்டிஎம்சி விதித்துள்ள தடை மற்றும் போராட்டத்தால் நாளொன்றுக்கு ரூ. 200 கோடி மதிப்பிலான வா்த்தகம் பாதிக்கப்படும் என்று வாதிட்டாா். இதைக் கவனத்தில் கொண்ட தலைமை நீதிபதி சூா்ய காந்த், பண்டிகை காலங்களில்தான், சிறிய கடைக்காரா்கள் தங்களின் வாழ்வாதாரத்தைப் பெறுகிறாா்கள் என்பதை உணா்ந்துள்ளோம். அவா்களுடைய ஒட்டுமொத்த குடும்பங்களும் எதிா்கொள்ளும் சிரமங்களை நீதிபதிகளாகிய நாங்களும் அறிவோம். இந்த மனு அக்.26 அல்லது 27-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட பரிசீலிக்கப்படும் என தெரிவித்தனா்.