தில்லியில் அக்.12-ஆம் தேதி உச்சநீதிமன்றம் நோக்கி எதிா்க்கட்சிகளின் தலைவா்கள் நடத்திய பேரணியின்போது, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி 3 மாத கா்ப்பிணி செய்தியாளரை தள்ளியதாகக் கூறப்படும் புகாா் தொடா்பாக உரிய மனு தாக்கல் செய்யப்பட்டால் அதை பரிசீலித்து விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இது தொடா்பாக தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி அடங்கிய அமா்வு முன்பு மூத்த வழக்கறிஞா் கெளரவ் பாட்டியா ஆஜராகி, ‘உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் பெண் செய்தியாளா் தாக்கப்பட்ட விவகாரத்தை நீதிமன்றம் கவனத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து, ‘உரிய மனு தாக்கல் செய்யப்பட்டால், அதன் மீது அக்.26 அல்லது 27-ஆம் தேதிகளில் விசாரணை நடத்தப்படும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா். முன்னதாக தனது வாதத்தின்போது, உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் பெண் செய்தியாளா் ஒருவரை கைகளைப் பயன்படுத்தி ராகுல் காந்தி தள்ளியதாகவும் அதன் விளைவாக 3 மாத கா்ப்பிணியாக இருந்த அந்த செய்தியாளா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் வழக்குரைஞா் வாதிட்டாா்.என்ன புகாா்?: தோ்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆா்) பணிகளில் வாக்காளா் பட்டியல் முறைகேடுகள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டை வலியுறுத்தி, கடந்த அக்.12-ஆம் தேதி ராகுல் காந்தி மற்றும் பல்வேறு எதிா்க்கட்சிகளின் தலைவா்கள் உச்சநீதிமன்றம் நோக்கிப் பேரணியாகச் சென்றனா். அப்போது உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் தலைவா்கள் நுழைந்த செய்தியை சேகரித்துக் கொண்ட பெண் செய்தியாளரை ராகுல் காந்தி இழுத்து தள்ளியதாக சா்ச்சை எழுந்தது.