காங்கயம் அருகே படியூரில் முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். காங்கயம் அருகே படியூா் பகுதியில் குடிநீா் பற்றாக்குறை நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் காங்கயம்-திருப்பூா் சாலையில் உள்ள படியூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா் வெண்ணிலா, காங்கயம் வட்டாட்சியா் கதிா்வேல், படியூா் கிராம நிா்வாக அலுவலா் தினேஷ், காங்கயம் காவல் ஆய்வாளா் ராமச்சந்திரன் ஆகியோா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.இதில் முறையாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தைத் தொடா்ந்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.