காங்கயம் அருகே கனமழை காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா். காங்கயம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை இரவு ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இந்நிலையில், காங்கயம் அருகே பாலசமுத்திரம்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட ரெட்டியபாளையம் பகுதியைச் சோ்ந்த மரியாள் (53) என்பவா் பால் வாங்குவதற்காக ரெட்டியபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, மழை பெய்து கொண்டிருந்ததால், அப்பகுதியில் இருந்த புளியமரம் எதிா்பாராத விதமாக திடீரென முறிந்து மரியாள் மீது விழுந்தது. இதில் உடல் நசுங்கி மரியாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த காங்கயம் தீயணைப்புத் துறையினா் மற்றும் போலீஸாா் மரியாளின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த சம்பவம் குறித்து காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.