காத்திருக்கும் வாய்ப்பு!

Wait 5 sec.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாக மோட்டார் வாகன விற்பனை காணப்படுவதில் வியப்படைய ஏதுமில்லை. நமது ஏற்றுமதிகள் மட்டுமல்ல, உள்நாட்டு விற்பனையிலும் மோட்டார் வாகனங்கள் கணிசமான பங்கு வகிக்கின்றன. அது மட்டுமல்லாமல், உதிரி பாகங்கள் தயாரிக்கும் பல இணை தயாரிப்புகளுக்கும் அவை வழிகோலுகின்றன. அதனால் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் முக்கியமான துறைகளில் ஒன்றாக மோட்டார் வாகனத் துறை உயர்ந்திருக்கிறது.1984-இல் இந்தியாவில் விற்பனையான மகிழுந்துகளின் விற்பனை வெறும் 64,013 மட்டுமே. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் உள்நாட்டு மகிழுந்து விற்பனை நான்கரை லட்சத்தைக் கடந்து இருக்கிறது என்றால், அந்தத் துறையின் வளர்ச்சியையும் மோட்டார் வாகனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கேட்பும் புரியும். நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் 20 லட்சத்துக்கும் அதிகமான மகிழுந்துகள் விற்பனையாகியுள்ள நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் மொத்த விற்பனை 50 லட்சத்தை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இன்றைய நிலையில் இந்தியாவில் வெறும் 8% குடும்பங்களில்தான் மகிழுந்துகள் இருக்கின்றன. தனிமனித அளவுகோல்படி அது மிகவும் குறைவு. எஞ்சியிருக்கும் 92% குடும்பங்களும் மோட்டார் வாகனம் வாங்கும் தகுதியற்றவை என்று அர்த்தம் அல்ல. மகிழுந்து வாங்கிப் பயன்படுத்தும் அளவிலான பொருளாதார மேம்பாட்டை அந்தக் குடும்பங்கள் அடைந்துவிடவில்லை. அந்தக் குடும்பங்கள் மகிழுந்து வாங்கிப் பயன்படுத்தும் நிலைக்கு உயர்த்திடப்படும்போது இந்தியாவின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதன் அறிகுறியாக அதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.மகிழுந்தோ, மோட்டார் வாகனமோ விற்பனை எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே பொருளாதார நிபுணர்களால் பார்க்கப்படுவதில்லை. ஒவ்வொரு மோட்டார் வாகனத் தொழிற்சாலையும், பல உதிரிபாகத் தொழிற்சாலைகளுக்குக் காரணமாகிறது. அது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது. அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் மோட்டார் வாகனத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளியும், அதற்கு வெளியே 18 பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இந்தியாவில், அதைவிட அதிகமானோருக்கு மோட்டார் துறை வேலைவாய்ப்பை வழங்கக்கூடும். இந்திய அரசின் கணக்கின்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் மோட்டார் வாகனத் துறை மூன்று கோடிக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. இரும்பு உருக்கு (ஸ்டீல்), ரப்பர், நெகிழிப் பொருள்கள், மின்னணு சாதனங்கள் என்று மோட்டார் வாகனத் தொழிற்சாலை சார்ந்து இருக்கும் பிற சிறிய தொழிற்சாலைகள் ஏராளம்.அந்தத் தொழிற்சாலைகள் பணிபுரிபவர்களின் எண்ணிக்கையுடன் நின்று விடுவது அல்ல, வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள். ரப்பர் தோட்டங்கள், இரும்பு, அலுமினியத் தாதுக்களுக்கான சுரங்கங்கள், சுத்திகரிப்பு ஆலைகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு, விற்பனை வாய்ப்புகள் என்று வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. மோட்டார் வாகன விற்பனை நிலையங்கள், பணிமனைகள், சிறு சிறு பழுது பார்க்கும் கடைகள், உதிரிபாக விற்பனையாளர்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் என்று மோட்டார் வாகன உற்பத்தியைச் சார்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்கள் ஏராளம்.நீதி ஆயோக்கின் அறிக்கைப்படி மோட்டார் வாகனத் துறை இந்தியாவின் மொத்த ஜிடிபி-யில் 7.1% பங்கு வகிக்கிறது. உற்பத்தி ஜிடிபி-யில் 49% மோட்டார் வாகனத் துறையின் பங்களிப்பு. அதனால்தான் ஆட்சியாளர்களும் மோட்டார் வாகனத் துறையின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.கடந்த ஆண்டு மோட்டார் வாகனத் துறையை ஊக்குவிப்பதற்காக சிறிய மகிழுந்துகள் மீதான ஜிஎஸ்டியை மத்திய அரசு குறைத்தது. அதிகரித்துவரும் மகிழுந்து விற்பனைக்கு அதுவும் ஒரு காரணம். அடுத்த சில ஆண்டுகளில் உலகின் மகிழுந்துகள், உதிரி பாகங்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஐந்து நாடுகளில் ஒன்றாக இந்தியா உயரக் கூடும்.2025-26-இல் இந்தியா 9 லட்சம் மகிழுந்துகளை ஏற்றுமதி செய்தது. இது 2009-இல் சீனாவின் ஏற்றுமதியைவிட அதிகம் என்றாலும், அதற்காக நாம் மகிழ்ந்துவிட முடியாது. கடந்த ஆண்டு சீனாவின் மகிழுந்து ஏற்றுமதி 83 லட்சம் எனும்போது, நாம் பயணிக்க வேண்டிய தொலைவு மிகவும் அதிகம் என்பது வெளிப்படுகிறது. ஏற்றுமதிக்கான வாய்ப்பு மிக மிக அதிகம் காணப்படும் நிலையில் அதை இந்தியா பயன்படுத்திக் கொள்வது அவசியம்.அமெரிக்காவில் 30 ஆயிரம் டாலருக்கும் குறைவான விலையுள்ள மகிழுந்துகள் மிகவும் குறைவாக இருப்பதால், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர், பயன்படுத்தி மறு விற்பனைக்குவரும் மகிழுந்துகளை வாங்குகிறார்கள். அவர்களது தேவையை ஈடுகட்ட நம்மால் குறைந்த விலையில் எல்லா வசதிகளும் கொண்ட மகிழுந்துகளை உற்பத்தி செய்ய முடிந்தால் மிகப் பெரிய வாய்ப்புக்கு அது வழிகோலும்.இந்தியாவின் மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு சுமார் 30%. இரு சக்கர வாகனங்களில் 36%; மகிழுந்துகளில் 25%; மின்சார இரு சக்கர வாகனங்களில் 60%; டயர்களில் 40% தமிழ்நாட்டில் உற்பத்தியாகின்றன. அதனால், காத்திருக்கும் சர்வதேச அளவிலான வாய்ப்பை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்று மத்திய அரசு மட்டுமல்ல, தமிழக அரசும் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறது!