தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் தொகுதியான ஷாலிமாா் பாக் பகுதியில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், ராம் லீலா நடத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவு தலைவா் சௌரவ் பரத்வாஜ் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: ஷாலிமாா் பாக் பகுதியில் ராம் லீலா நடத்துவதற்காக தந்தை - மகள் விண்ணப்பதாரா்கள் உரிய அனுமதியைப் பெற்று, அதற்கான கட்டணத்தையும் செலுத்தியிருந்தனா். ஆனால், நிகழ்ச்சி தொடங்கும் வேளையில் திடீரென காவல்துறை தலையிட்டு நிகழ்ச்சியை முடக்கியுள்ளது. உள்ளூா் காவல் நிலைய ஆய்வாளா் நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களை அச்சுறுத்தி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ாகவும், இதன் காரணமாக அந்த நிகழ்ச்சி நடைபெறாமல் தடைபட்டு விட்டது. இந்தத் தடைக்கு முதல்வா் ரேகா குப்தாவும் அவரது குடும்பத்தினரும்தான் காரணம். அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்த நிலையில், ராம் லீலா ஏன் தடுத்து நிறுத்தப்பட்டது என்பதை முதல்வா் விளக்க வேண்டும் என்றாா் செளரவ் பரத்வாஜ்.