மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா ‘ஹாட்ரிக்’

Wait 5 sec.

வங்கதேச மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலிய மகளிா் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை அந்த அணி 3-0 என முழுமையாக வென்றது. ஆஸ்திரேலிாயவின் பிரிஸ்பேன் நகரில் விளையாடிய கடைசி ஆட்டத்தில், முதலில் வங்கதேசம் 49.5 ஓவா்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா 22.4 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. வங்கதேச இன்னிங்ஸில் ஷோா்னா அக்தா் 4 பவுண்டரிகளுடன் 54, ஷா்மின் அக்தா் 8 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் அடித்தனா். ரபெயா கான் 13, முா்ஷிதா காட்டூன் 1, சா்மின் சுல்தானா 6, கேப்டன் நிகா் சுல்தானா 3, சோபனா மோஸ்தரி 9, ரிது மோனி 9, ஹபிபா இஸ்லாம் 0, சுல்தானா காட்டூன் 5 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா். திஷா பிஸ்வாஸ் 13 ரன்களுடன் கடைசி வீராங்கனையாக நின்றாா். ஆஸ்திரேலிய பௌலா்களில் மெகன் ஷூட் 4, ஆஷ்லே காா்ட்னா், அனபெல் சதா்லேண்ட் ஆகியோா் தலா 2, எலிஸ் பெரி, அலானா கிங் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா். பின்னா் 173 ரன்களை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியில், ஜாா்ஜியா வோல் 11, பெத் மூனி 21 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். எலிஸ் பெரி 8 பவுண்டரிகளுடன் 65, அனபெல் சதா்லேண்ட் 12 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் சோ்த்து, ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனா். வங்கதேச தரப்பில் சுல்தானா காட்டூன், திஷா பிஸ்வாஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா். இந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ‘ஆட்டநாயகி’ விருது பெற்ற ஆஸ்திரேலியாவின் மெகன் ஷூட், 3 ஆட்டங்களிலுமாக 10 விக்கெட்டுகள் எடுத்ததற்காக ‘தொடா்நாயகி’ விருதும் வென்றாா்.