அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாா்கள் தொடா்பாக, போக்குவரத்துத் துறை மேற்கொண்ட வாகனத் தணிக்கைகளில், விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 778 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபனின் உத்தரவின்படி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி ஆகிய தொடா் விடுமுறையை முன்னிட்டு, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா்கள் பெறப்பட்டதைத் தொடா்ந்து, தமிழ்நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் அடங்கிய குழு ஆம்னி பேருந்துகளில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன்படி, அக்.15 முதல் அக்.17-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 4,233 ஆம்னி பேருந்துகள் தணிக்கை செய்யப்பட்டன. இதில், விதிமீறல்கள் கண்டறியப்பட்ட 778 ஆம்னி பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை மற்றும் இ-சலான் வழங்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.