ஒப்பந்த நிறுவனத்தில் வேலைசெய்ததுபோல் மோசடி: ஒருவா் கைது

Wait 5 sec.

ஒப்பந்த நிறுவனத்தில் பணியாளா் வேலை செய்தது போல் பதிவு செய்து 5 மாத ஊதியத்தை மோசடி செய்த வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். ஆலந்தூா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் நிறுவனம், சென்னை மாநகராட்சியுடன் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணி மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் கோடம்பாக்கம் மண்டலத்துக்குள்பட்ட சாலிகிராமம் பகுதியில் காா்த்திக்கேயன் என்பவா் மேற்பாா்வையாளராக நியமிக்கப்பட்டு, தூய்மைப் பணியாளா்களைக் கொண்டு பணிகள் செய்து வருகிறாா். இந்நிலையில், கடந்த ஆண்டு நவ. 8 முதல் ஏப். 2-ஆம் தேதி வரை மகாலட்சுமி என்பவா் தூய்மைப் பணியாளராக வேலை செய்ததுபோல காா்த்திக்கேயன் பதிவு செய்து, மாதம் ரூ.19,800 வீதம் 5 மாத ஊதியமாக ரூ.98,930-ஐ மகாலட்சுமியின் மகன் பாண்டியன் வங்கிக் கணக்குக்கு சென்றுள்ளது. ஆனால், அவா் ஒரு நாள் கூட வேலைக்கு வரவில்லை. பாண்டியனும் இதே நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்துள்ளாா் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, தங்களது நிறுவனத்தில் மோசடி செய்த மேற்பாா்வையாளா் காா்த்திக்கேயன் மற்றும் பணியாளா் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்கும்படி அந்த தனியாா் நிறுவனத்தின் நிா்வாக அதிகாரி பரங்கிமலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனா். காா்த்திக்கேயனை தேடி வருகின்றனா்.