ம. சதீஸ்குமார் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்திலிருந்த திண்டுக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டத்தை 1985 -ஆம் ஆண்டில், மறைந்த முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 -இல் அறிவித்தார், அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். முதல் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார் மாதவன் நம்பியார். முதலில் "அண்ணா மாவட்டம்' என்றும், 1986 - இல் "காயிதே மில்லத் மாவட்டம்' என்றும், 1996- இல் "மன்னர் திருமலை மாவட்டம்' என்றும் பெயர்கள் மாறின. மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே மாவட்டங்கள் செயல்படும் என்று 1997- ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அறிவித்தது முதல் "திண்டுக்கல் மாவட்டம்' என அழைக்கப்படலாயிற்று.நகரின் நடுவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக்கோட்டையின் அமைப்பு "பெரிய திண்டு' போன்றுள்ளதாலும், திண்டி என்ற அரசன் ஆண்ட பகுதி என்பதாலும் "திண்டுக்கல்' எனவும் அழைக்கப்படலாயிற்று. ஆங்கிலேயர் ஆட்சியிலேயே 1886 - ஆம் ஆண்டு நவம்பர் 1-இல் நகராட்சியாக அங்கீகரிக்கப்பட்ட திண்டுக்கல், 2013-ஆம் ஆண்டில் மாநகராட்சியாகத் தரம் உயர்ந்தது. கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதிகளில் ஆதிமனிதர்கள் வாழ்ந்த கற்திட்டைகள், குகை போன்ற அமைப்புகள் உள்ளன. பழனிக்கு அருகே பெருங்கற்கால இடமாக அறியப்படும் பொருந்தலில் மேற்கொண்ட அகழாய்வில், மக்கள் வாழ்விடப் பகுதியும், இடுகாட்டுப் பகுதியும், முதுமக்கள் தாழிகளும் கண்டறியப்பட்டுள்ளன. ஈமச் சின்னங்களுக்குள் நெல்லை வைத்து புதைத்ததற்கான சான்றுகள் அங்கு கிடைத்துள்ளன. பெருங்காலத்துக்கு முன்பிருந்தே மானிட வாழ்விடப் பகுதியாக மாவட்டத்தின் பல பகுதிகள் இருந்திருக்கின்றன. அணைப்பட்டி சித்தர் மலையின் பின்புறம், சிறுமலை போன்ற இடங்களில் பழங்காலக் குகையோவியங்களும் கண்டறியப்பட்டுள்ளன. சுற்றுலாத் தலமாக, மலை வாழிடமாக கொடைக்கானல், சிறுமலை, தாண்டிக்குடி ஆகிய மலைகள் உள்ளன.ஆட்சி மாற்றத்திலும் விடுதலைப் போரிலும் மலைக்கோட்டைசேர மன்னர் தர்மபாலன் உருவாக்கிய மலைக்கோயிலை பின்னாளில் நாயக்க மன்னர்கள் கலை அழகுபடுத்தினர். சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள் ஆட்சி செய்த மலைக்கோட்டை இங்குள்ளது.நாயக்கர்களின் சீர்மிகு கோட்டையாகவும், திப்பு சுல்தானின் ராணுவப் பயிற்சி தளவாடமாகவும் பரிணமித்து, விடுதலைப் போரின் முன்னோடிகளான வேலு நாச்சியார், மருதிருவர், ஊமைத் துரை, செவத்தையா போன்றோர் தஞ்சமடைந்து தங்களை வலுப்படுத்திக் கொண்ட இந்த மலைக்கோட்டை, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வரலாற்று சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது.மூக்கறுப்புப் போர் இங்கு நடந்திருக்கிறது. விஜயநகர ஆட்சியில் இருந்த 72 பாளையங்களில் 26 பாளையங்கள் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்தவை. பாளையக்காரர்கள் புரட்சியைத் தொடர்ந்து விருப்பாச்சி பாளையக்காரர் கோபால நாயக்கர் திண்டுக்கல் கூட்டமைப்பை உருவாக்கி, ஆங்கிலேயருக்கு எதிரான போரை நடத்தினார். மருது பாண்டியர்கள், தீரன் சின்னமலை, துண்டாஜி வாக், கேரள வர்மா போன்ற விடுதலைப் போர் வீரர்கள் இக்கூட்டமைப்பில் இடம்பெற்று, விடுதலைப் போரை நடத்தினர். பின்னாளில் ஆங்கிலேயரால் கோபாலநாயக்கர் தூக்கிலிடப்பட்ட பகுதி "கோபால சமுத்திரக் கரை' என அடையாளப்படுத்தப்படுகிறது. இவர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் விருப்பாச்சியில் கோபாலநாயக்கர் மணிமண்டபமும், திண்டுக்கல் பகுதியில் ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆகியோருக்கான மணிமண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளன. விடுதலைப் போரின் பல்வேறு சமயங்களில் அண்ணல் காந்தியடிகள் திண்டுக்கல்லின் பல்வேறு பகுதிகளுக்கு வந்திருந்து உரை நிகழ்த்தியிருக்கிறார். "சிவம் பேசினால் சவம் எழும்' என்று பாரதியார் புகழ்ந்த தியாகி சுப்ரமணிய சிவாவை தந்தது வெற்றிலைக்கு புகழ்பெற்ற வத்தலகுண்டு.இலக்கியங்களில்...சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு பாடல்கள் நத்தம் பகுதி சிறுகுடியைச் சேர்ந்த புகழ்பெற்ற வள்ளல் பண்ணன் புகழ்பாடுகின்றன. காப்பிய இலக்கியமான சிலப்பதிகாரம்,"மாவும் பலாவும் சூழடுத் தொங்கியதென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும்அம்மலை வலங்கொண் டகன் பதி செல்லுமின்' என பாண்டியருக்கு (தென்னவன்) சொந்தமான சிறுமலையில் மாம்பழங்களும், பலாப் பழங்களும் செழித்திருந்ததைப் பதிவு செய்வதோடு, இதன் வழியே கண்ணகி - கோவலன் பயணம் மதுரையை நோக்கி அமைந்தது என்பதையும் பகிர்கிறது. பலபட்டடைச் சொக்கநாத புலவர் இயற்றிய சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த பத்மகிரிநாதர் தென்றல் விடு தூது போற்றுவது திண்டுக்கல் மலைக்கோட்டையில் கோயில் கொண்டிருந்த பத்மாகிரிநாதரான சிவனைத் தான். திருமுருகாற்றுப்படையும், திருப்புகழும் கொண்டாடும் திருஆவினன்குடி, அகநானூறு சிறப்பிக்கும் பொதினி மலை என இலக்கியங்களில் பழனி மலைப் புகழப்பட்டுள்ளதோடு, இக்கால இலக்கியங்களிலும் தனக்கெனப் பங்கைக் கொண்டிருக்கிறது திண்டுக்கல். தமிழின் முதல் தொடர்கதையும், இரண்டாவது நாவலுமாகவும் அறியப்படும் கமலாம்பாள் சரித்திரம் படைத்த ராஜமய்யர் வத்தலகுண்டில் பிறந்தவர். 1893- ஆம் ஆண்டில் விவேக சிந்தாமணி இதழில் தொடர்கதையாக வெளிவந்துள்ளது கமலாம்பாள் சரித்திரம்.சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்கள்தோல் பதனிடும் தொழிற்சாலைகள் நிறைந்திருந்த இந்தப் பகுதி தொழிலாளர்களின் வாழ்க்கை, போராட்டங்களை மையமாக வைத்து "தோல்' நாவலைப் படைத்தளித்தார் எழுத்தாளர் டி. செல்வராஜ். சாகித்திய அகாதெமி விருது பெற்றார். குழந்தை இலக்கியத்துக்காக பாலசாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்ட முதல் விருதை தன் படைப்பான "அந்தோணியின் ஆட்டுக்குட்டி' நாவலுக்காகப் பெற்றார் ஆசிரியர் மா. கமலவேலன். மேலும் அவரின் "அது மட்டும் மாறவில்லை' சிறுகதை திண்டுக்கல் சந்தை நடைமுறைகளையும், "கதவு' சிறுகதை கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை மையமாகவும் வைத்துப் படைக்கப்பட்டவை. மொழிபெயர்ப்பாளர் கமலாலயன் வே. குணசேகரன் பிறந்து, கல்வி கற்றது திண்டுக்கல் நகரில் தான். அண்மையில் "கூத்தொன்று கூடிற்று' நூலுக்காக சாகித்ய அகாதெமியின் யுவ புரஷ்கார் விருது பெற்று, மேலும் புகழ் சேர்த்திருக்கிறார் எழுத்தாளர் லக்ஷ்மி ஹர். இப்படி எழுத்தாளர்களுக்குக் களமாகவும் திண்டுக்கல் வளம் சேர்த்திருக்கிறது.தொழில் நகரம்இரும்பால் வெளிப்பகுதியும், பித்தளையால் உள்பகுதியும் கொண்டு உருவாக்கப்படும் பூட்டுத் தொழிலில் சிறந்து விளங்கியது திண்டுக்கல். தன்னுடைய தனித்துவமான மாங்காய் வடிவ பூட்டுகளுக்காகவும், அதன் உறுதி நிலைப்புத் தன்மையால் பாதுகாப்புக்காகவும் உலகப் புகழ் பெற்றிருக்கின்றன திண்டுக்கல் பூட்டுகள். இங்கு தோல் பொருள்கள் ஏற்றுமதியும் அதிகம். சின்னாளபட்டி சுங்குடி சேலைகள், அய்யலூர் தக்காளி, ஆட்டுச்சந்தை, சிறுமலை வாழை, ஆயக்குடி கொய்யாப்பழம், கொட்டப்பட்டி கத்தரிக்காய், நிலக்கோட்டை மல்லிகைப்பூ, கொடைக்கானல் மலைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம் என திண்டுக்கல்லின் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவற்றில் சில பொருள்கள் புவிசார் குறியீடு பெற்று, தன் தனித்தன்மையை தக்க வைத்துக் கொண்டுள்ளன.ஆன்மிகத்தில்...திண்டுக்கல் மாவட்டத்தில் சமணர்கள் வாழ்ந்ததற்கான கூறுகளான சமணர்படுகைகள் அணைப்பட்டி சித்தர்கள் மலையில் உள்ளன. வழிபாட்டுத் தலங்களில் பழனி, ஆவினன்குடி என அழைக்கப்படும் மூன்றாம் படைவீடு முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், நத்தம் மாரியம்மன், நிலக்கோட்டை மாரியம்மன், வத்தலகுண்டு மாரியம்மன், பழனி மாரியம்மன் என மாரியம்மனுக்கெனச் சிறப்பான திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. 350 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் சமபந்தி கறி விருந்து, பயணங்களில் காவல் துணை செய்யும் அய்யலூர் வண்டிக்கருப்பணசாமி கோயில் கறி விருந்து, விராலிபட்டி கோட்டைச்சாமி கோயிலில் இரவில் நடைபெறும் கறிச்சோறு திருவிழா உள்ளிட்ட திருவிழாக்கள் பிரபலமானவை. மேட்டுப்பட்டி பாஸ்கு திருவிழாவின் உயிர்த்த ஆண்டவர் தேர்ப் பவனியின் ஒரு பகுதியாக பேகம்பூர் பெரிய பள்ளிவாசலிலும், கோட்டை மாரியம்மன் கோயிலும் நடைபெறும் மாலை மரியாதைகள் போன்ற மத நல்லிணக்க செயல்பாடுகள் போற்றுதற்குறியன. பிரான்ஸ் நாட்டுக்கு அடுத்து கொடைக்கானல் நகரில் மட்டுமே சலேத் மாதாவுக்கான திருத்தலம் உள்ளது. பேகம்பூர் பெரியவாசல் இசுலாமியர்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகும்.கல்வி வளர்ச்சியில்...150 ஆண்டுகள் கடந்த புனித மரியன்னை பள்ளி உட்பட பல பள்ளிகள், 70 ஆண்டுகள் கடந்த காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக் கழகம், அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, தொழிற் பயிற்சி நிலையங்கள், தனியார் கல்லூரிகள் உள்ளிட்டவை பெருமளவு வளர்ச்சிக் கண்டிருக்கிறது.