இப்படி ஒரு தலைப்பைப் பார்த்ததும் சிலருக்கு ஆந்திராவில் குப்பம் நகருக்கு அருகில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகம் நினைவில் தோன்றலாம். சிலருக்குத் திருவனந்தபுரத்தில் செயல்படும் திராவிட மொழியியல் கழகம் தோன்றக் கூடும். இரண்டும் உருவாகக் காரணமானவர் பேராசிரியர் வ.ஐ. சுப்பிரமணியம். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர். பேரறிஞர் வையாபுரிப் பிள்ளையின் மாணவர். கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் தலைவராக விளங்கியவர். மொழியியல் துறைக்கும்தான்.தமிழ்நாட்டில் இப்படி ஒரு நிறுவனமோ பேரமைப்போ தனியே உண்டா? தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளை ஒரு குடையின்கீழ் வளப்படுத்தவும் ஒப்பிட்டு ஆராயவும் இத்தகைய அமைப்பும் நிறுவனமும் தேவையன்றோ!தமிழை, தமிழரை, தென்னிந்திய மொழிகளை, தென்னிந்திய மக்களை, தென்னிந்திய நிலப்பரப்பைக் குறிக்கத் திராவிடம் என்னும் சொல் பயன்பட்டு வந்திருக்கின்றது. திராவிட வேதம், திராவிட சிசு, திராவிட மாபாடியம் முதலியனவெல்லாம் வழங்கிவந்திருக்கின்றன! இன்று திராவிடத்தைக் கொண்டாடுவோர், திராவிடத்தை விரும்பாதோர் எனும் இருசாராருமே எண்ணிப் பார்க்கத்தக்கதாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த ஒரு பெருமுயற்சி விளங்குகின்றது.திராவிட இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பே திராவிட மொழிகளின் மேம்பாட்டிற்காக ஒரு பேரமைப்பு, சென்னை மாகாணமாயினும் தமிழ் மண்ணில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே அறிஞர்களின் முயற்சியால் தோன்றியிருக்கின்றது. அதுதான் திராவிட மொழிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட முதல் பேரமைப்பாக இருக்கக்கூடும்.அதுதான் 'திராவிட பாஷா சங்கம்'! அதன் பூர்வாங்க முதல் கூட்டத்தின் தலைவர் நீதிபதி எஸ். சுப்பிரமணிய ஐயர்.தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட மண்ணின், மொழியின் பேராளுமைகள், பேரறிஞர்கள் இடம்பெற்ற அமைப்பு!தமிழைப் பொறுத்தவரை உ.வே.சாமிநாதய்யரும் சி.வை. தாமோதரம் பிள்ளையும் ஒருசேரப் பங்கேற்ற அமைப்பு!இந்தத் தருணத்தில் இந்த வரலாற்றோடு தொடர்புடைய சில பேராளுமைகளைச் சற்றே முதலில் எண்ணிப் பார்ப்போம்.ஒவ்வொரு நிலையில் இந்தியாவின், தென்னகத்தின், தமிழ்நாட்டின் மிக முக்கியமான மனிதர் அவர். 1934 ஏப்பிரலில் காலமானார். மலையாளி. கேரளப் பகுதியில் பிறந்தவர். ஆனால் அவர் வசித்ததும் அவருக்குப் பிடித்ததும் சென்னையின் மயிலாப்பூர்தான். ஆங்கிலேயராண்ட இந்திய வரலாற்றின் ஒரு பகுதியாக அமையக் கூடியது அவரது வாழ்க்கை வரலாறு. அவர் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியைச் சுயசரிதையாக ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். இறப்பதற்கு முன் தன் மகளிடம் தானெழுதிய சுயசரிதையைத் தான் இறந்து பத்தாண்டுகள் வரை வெளியிடவேண்டாம் எனத் தெரிவித்திருந்தார். என்ன கொடுமை! முப்பதாண்டுகளுக்குப் பிறகே அவரது மகளால் வெளியிட முடிந்தது.பொருளாதார நெருக்கடியெல்லாம் இல்லை. மகள் பார்வதி அம்மா 'லேடி மாதவன் நாயர்' எனப் பரவலாக அறியப்பட்டவர். அவரது பெயரால் சென்னையில் ஒரு சாலைக்கு 'லேடி மாதவன் சாலை' என்றே பெயரிடப்பட்டிருந்ததென்றால் பாருங்களேன்!இறந்து பத்தாண்டுகள் வரை தன் சுயசரிதையை வெளியிட வேண்டாம் என்றவர் - சர் சி. சங்கரன் நாயர்.சங்கரன் நாயர் புகழ்பெற்ற திருநெல்வேலி ஆஷ் கொலை வழக்கைச் சென்னை மாகாணத் தலைமை நீதிபதியுடன் ஒரே அமர்வில் இருந்து விசாரித்த முக்கியமான நீதிபதி. 1897-இல் அமராவதி நகரத்தில் கூடிய இந்திய தேசிய காங்கிரசின் பதின்மூன்றாவது மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவரும் கூட. இந்தியாவை ஆளும் வைசிராயின் சபை அங்கத்தினர் முதலிய பெரும்பதவிகளை வகித்தவர். ஜாலியன்வாலாபாக் படுகொலையைக் கண்டித்து வைசிராய் சபைப் பொறுப்பைத் துறந்தவர். பாரதியியலிலும் ஓரிடம் அவருக்குண்டு.பாரதியார் 'சந்திரிகையின் கதை' என ஒரு புதினத்தை (நாவல்) எழுதினார். ஒரு பகுதியே கிடைத்துள்ளது. இன்னொரு பகுதி பாதி கிழிந்த வடிவில் கிடைத்தது. எஞ்சியவை கிடைக்கவில்லை. பாலிய விவாகத்தால் ஏற்படும் துயரம், விதவை மறுமணம், கலப்பு மணம் முதலியன கதையின் பொருள். அந்தக் கதையில் இரு நிஜ மனிதர்களைக் கதாபாத்திரங்களாகப் பாரதியார் படைத்திருந்தார். அந்த இருவரும் அக்கால அரசியல் வாழ்விலும் சமூகச் சீர்திருத்தச் செயல்பாடுகளிலும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள். ஒருவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். மற்றவர் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு. அநேகமாகத் தமிழ்ப் புதின வரலாற்றில் நிஜ மனிதர்களைக் கதாபாத்திரங்களாக்கியது இதுதான் முதல் முறையாக இருக்கக்கூடும்.'தமிழ்நாடு தவமுடையது' என்று தொடங்கினார் பாரதியார் தானெழுதிய காங்கிரஸ் வரலாற்று நூலை. என்ன காரணம்? '1885-இல் கூடிய முதல் காங்கிரசில் முதல் தீர்மானத்தைத் தமிழ்நாட்டுத் தலைவராகிய ஜி. சுப்பிரமணிய ஐயர் கொண்டுவந்ததால்.' அந்தக் காலத் தமிழ்நாட்டுத் தலைவர் அவர். சமூகச் சீர்திருத்தவாதி. இந்து ஆங்கில நாளிதழை நண்பர்களோடு சேர்ந்து தொடங்கியவர். தமிழின் முதல் நாளிதழ் 'சுதேசமித்திர'னைத் தொடங்கியவர். அதன் ஆசிரியரும்தான். வீரேசலிங்கம் பந்துலு- இராஜமுந்திரியில் பிறந்தவர். தெலுங்கர். சென்னையிலும் வசித்தவர். தெலுங்குமண்ணின் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர். தெலுங்கு இலக்கிய மறுமலர்ச்சியின் முன்னோடிகளில் ஒருவர். நெடுங்காடி வங்கி என்னும் வங்கிப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கடந்த தலைமுறையினர் நன்கறிந்த தனியார் வங்கி அது. அதைத் தோற்றுவித்தவர் அப்பு நெடுங்காடி. கோழிக்கோட்டில் பிறந்தவர். மலையாள மொழியின் முதல் புதினம் என இலக்கிய வரலாறுகளில் இடம்பிடிக்கும் 'குந்த லதா'வை எழுதியவர். இப்படிச் சர். சி. சங்கரன் நாயர், ஜி. சுப்பிரமணிய ஐயர், வீரேசலிங்கம் பந்துலு, அப்பு நெடுங்காடி ஆகியோரைப் போலவே முக்கியமான தென்னிந்தியப் பரப்பின் ஆளுமைகள் பலரும் சேர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில், சென்னையில், 1899, 1900-இல் தமிழ் முதலாய திராவிட மொழிகளுக்காக ஆங்கிலேயராட்சியில் பதிவுசெய்யப்பட்ட ஓர் அமைப்பை உருவாக்கினர்; பொறுப்பு வகித்தனர்; செயல்பட்டனர். 1899 மார்ச் ஐந்தாம் தேதி சென்னை பச்சையப்பன் அரங்கில் ஏறத்தாழ ஐம்பது பிரமுகர்களும், இந்த முயற்சியில் ஆர்வம்கொண்ட ஏராளமான கல்லூரி மாணவர்களும் கூடினர். முதலில் 'தென்னிந்திய திராவிட சங்கம்' (சவுத் இண்டியன் டிரவிடியன் சங்கம்) என்னும் பெயரினைக் கொண்டு கூடிய கூட்டம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்ட பதினைந்து பிரமுகர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்தது. இந்தச் சங்கத்தின் பெயர் மற்றும் விதிமுறைகளை வகுப்பது அமைக்கப்பட்ட குழுவின் பணியாகும். இந்தப் பூர்வாங்க முதல் கூட்டத்தின் தலைவராக விளங்கியவர் சென்னை மாகாணத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்தவரும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி வகித்த முதல் இந்தியரும் - தமிழருமாகிய நீதிபதி சுப்பிரமணிய ஐயர். உருவாக்கப்பட்ட குழு 1889 மார்ச் 9, 16, 20, 28, 30, ஏப்பிரல் 8 ஆகிய தேதிகளில் மொத்தம் ஆறு முறை கூடி விதிமுறைகளை வகுத்தளித்தது. இந்தச் சங்கத்தின் பெயரைத் 'திராவிட பாஷா சங்கம்' என வரையறுத்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு திராவிட மொழிகளின் வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை, நோக்கங்களை உருவாக்கியது. மேலும் இக்குழு ஒரு புதிய குழுவை அமைத்து மக்களிடையே இந்தச் சங்கத்தின் நோக்கங்களைப் பரப்பவும் மக்களின் ஆதரவைப் பெறவும் அறிக்கை ஒன்றை உருவாக்கச் செய்தது.இந்தக் குழுவில் டி.எம். அப்பு நெடுங்காடி, தண்டலம் பாலசுந்தர முதலியார், எச். நாராயண ராவ், வி.டி. சேஷாத்திரியாச்சாரியார், ஜி. சுப்பிரமணிய ஐயர், வீரேசலிங்கம் பந்துலு ஆகியோர் இருந்தனர்.இந்த முயற்சிகளின் பின்புலத்தில் ஜே.எம். நல்லசாமி பிள்ளையும் இருந்தார். 'சித்தாந்த தீபிகை'யிலும் சமகால இதழ்கள் சிலவற்றிலும் இந்த முயற்சி குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்தன.1899-ஆம் ஆண்டின் இறுதி நாளில் 'திராவிட பாஷா சங்க'த்தின் தலைவர், துணைத்தலைவர்கள் உள்ளிட்ட நிருவாக இயக்குநர்களும் கௌரவ உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் முதன்மையான தீர்மானத்தைச் சுப்பிரமணிய ஐயர் முன்மொழிந்து பேசினார்.இந்தப் பேரமைப்புக்குத் தலைவராக இராஜா சவலை இராமசாமி முதலியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை மாநகரத்தின் 158-ஆம் ஷெரிப் ஆக ஆங்கிலேயராட்சியில் நியமிக்கப்பட்டவர் அவர். இந்தப் பதவியை வகித்த முதல் இந்தியர், தமிழர் அவர்தான். திவான் பகதூர் பி. இராஜரத்தின முதலியாரும் சர். சி. சங்கரன் நாயரும் துணைத்தலைவர்கள்.வேதம் வெங்கட்ராய சாஸ்துருலு இவர்களோடு தண்டலம் பாலசுந்தர முதலியார், வீரேசலிங்கம் பந்துலு, ஜி. சுப்பிரமணிய ஐயர், இலாசரஸ் பாதிரியார், டி. எம். அப்பு நெடுங்காடி, எஸ். மங்கேஷ் ராவ், சி.வி. சாமிநாதய்யர் உள்ளிட்ட பதினொருவர் நிருவாக இயக்குநர்கள். தமிழுக்கான கௌரவ உறுப்பினர்கள் கும்பகோணம் உ.வே. சாமிநாதய்யர், சி.வை. தாமோதரம் பிள்ளை, ஜே.எம். நல்லசாமி பிள்ளை, '1800 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்' என்னும் நூலைப் படைத்த வி. கனகசபை பிள்ளை ஆகிய நால்வர்.தெலுங்கு மொழிக்கு விசாகப்பட்டினம், இராஜமுந்திரி, சென்னையைச் சார்ந்த மூன்று அறிஞர்கள். வேதம் வெங்கட்ராய சாஸ்துருலு சென்னையைச் சேர்ந்தவர்.மலையாள மொழிக்குத் திருவனந்தபுரம் கேரள வர்மா வலியக்கோயில் தம்புரான், கோழிக்கோடு மானவிக்ரம எட்டன் ராஜா ஆகியோர்.கன்னட மொழிக்கு மைசூரைச் சேர்ந்த ஆர்.ஏ. நரசிம்மாசார், எஸ்.ஜி. நரசிம்மாசார், சென்னையைச் சேர்ந்த சிவசங்கர சாஸ்திரியார் ஆகியோர். அடுத்து நடந்த கூட்டத்தில் ஆங்கிலத்திலுள்ள அறிவியல் கலைச்சொற்களுக்கு இந்நான்கு மொழிகளிலும் இணையான சொற்களை இனங்காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இப்படித் தொடங்கிய முயற்சிகள் தொடர்ந்து நடையிட்ட வரலாற்றைத் திரட்டிப் பார்க்க வேண்டும். தேக்கம் பெற்றிருந்தால் அதன் காரணத்தையும் அறிய வேண்டும். இந்தப் பேரமைப்பைத் தொடங்கியவர்களுக்குத் தெரியுமோ? தெரியாதோ? இன்றும்கூடப் பலரும் அறியாத செய்தியாக ஒரு செய்தி இருக்கின்றது.அன்றைய சென்னை மாகாணத்தின் நான்கு பெரிய மொழிகள் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியன என்பது மட்டுமல்ல இம்மொழிகளை ஒன்றிணைத்துப் பேசக் காரணம்! இந்நான்கும் உறவுடைய ஒரு குடும்ப மொழிகளும்கூட! இந்த உண்மையை முதன்முதலில் எடுத்துரைத்தவர் யார் என்னும் செய்திதான் பரவலாக அறியப்படாத அச்செய்தி! தென்னிந்திய மொழிக்குடும்பம் அல்லது திராவிட மொழிக் குடும்பம் என்றதும் பலரின் நினைவிலும் முதலில் தோன்றுபவர் கால்டுவெல். ஆனால் அவருக்கும் முன்னதாக இக்கருத்தினை வெளிப்படுத்தியவர் ஆங்கிலேய அரசு அதிகாரியான எல்லிஸ் என்னும் அறிஞரே என்பதை அனைவரும் அழுத்தமாக மனத்தில் கொள்ளவேண்டும். எல்லிஸ் சமயம் பரப்ப வந்தவர் அல்லர். இந்த ஆங்கிலேயருக்கும் திராவிட பாஷா சங்கத்தின் துணைத் தலைவரான சங்கரன் நாயருக்கும் ஒருவகையான ஒற்றுமை இருந்திருக்கின்றது. தான் எழுதிய ஆக்கங்களைத் தனக்கு நாற்பது வயதாகும் வரை வெளியிடக்கூடாதென்ற விரதம் பூண்டிருந்தவர் இவர். (நம் காலத்தில் கூட இத்தகைய விரதத்தைச் சிலர் மேற்கொண்டால் - வாழ்க்கை முழுதுமே வெளியிடுவதில்லை என்றும் - நன்றாகத்தான் இருக்கும்!) இவர் பெயரிலும் சென்னையின் முக்கியமான பகுதியில் சாலை ஒன்று உண்டு. 'எல்லீசன்' எனத் தன் பெயரைத் தமிழ்ப்படுத்திக் குறிப்பிட்டுக் கொண்ட, திருக்குறளை மொழிபெயர்த்த, திருவள்ளுவர் உருவம் பொறித்த தங்க நாணயங்களை வெளியிட்ட ஆங்கிலேய அதிகாரி எல்லிஸ் தான் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியன ஒரு குடும்ப உறவுடைய மொழிகள், தமிழ்மொழி மலையாளம் முதலிய மற்றை மொழிகளுக்குப் பெற்றோராம் தகைமை கொண்டது ஆகிய கருத்துகளை முதன்முதலில் எடுத்துரைத்தவர். 1814-ஆம் ஆண்டில் ஆங்கிலேய அரசின் உயர் அதிகாரியான காம்பெல் என்பவர் எழுதிய தெலுங்கு மொழி இலக்கண நூலுக்கு எல்லிஸ் ஓர் ஆராய்ச்சி முகவுரை எழுதியிருந்தார். அதில் அவர் முதன் முதலில் இந்தக் கருத்தை மொழிந்திருந்தார். எல்லிஸின் அறியப்படாத பங்களிப்புகளைக் கண்டறிந்து தாமஸ் டிரவுட்மன் என்னும் அமெரிக்க அறிஞர் 'திராவிடச் சான்று' எனப் பொருள்தரும் தலைப்பில் நூலாக எழுதியிருக்கின்றார்.மனோன்மணீயம் சுந்தரனார் பாடியபடி, 'தமிழ்த்தாயின் உதரத்திலிருந்து பிறந்த மொழிகள் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும்' என்பது உண்மையேயாயினும் ஒத்துக்கொள்ளத் தயாரில்லையே மற்ற மொழியினர்!1925-இல் 'திராவிட இந்தியா' (டிரவிடியன் இண்டியா) என்னும் டி.ஆர். சேஷகிரி ஐயங்காரின் ஆங்கில நூலுக்குச் சி.ஆர். ரெட்டி என்னும் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் எழுதிய அணிந்துரையின் ஒருபகுதி உணர்த்தும் உண்மை தமிழின் இடத்தைச் சற்றே உறுதிப்படுத்தி நமக்கு இதம்சேர்க்கிறது.சி.ஆர். ரெட்டி என்னும் சி. இராமலிங்க ரெட்டி ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகத் திகழ்ந்த பெருமைக்குரியவர். அந்தப் பெருமகனின் கூற்று இதுதான்:'திராவிடர்களின் புனித மொழி தமிழ்'! (தொடரும்)