நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

Wait 5 sec.

இதோ இன்னொரு தூக்கமில்லாத இரவு தயங்கித் தயங்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஒரு சர்க்கஸ் கம்பெனியின் உடைமைகளுக்குச் சற்றும் குறையாத சாமான் செட்டுகளுடன் எங்கள் குடும்பம் சென்னையிலிருந்து ஸ்ரீரங்கம் நோக்கிப் பயணிக்கத் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கிறது.'அங்கிள், நீ ஒரு பேட் பாய்!' என்று சொல்லிவிட்டு எங்கள் அபார்ட்மென்ட் அதிரச் சிரித்தபடியே எதிர் ஃப்ளாட்டுக்குள் ஓடிச்சென்று ஒளிந்து கொள்ளும் பிரகதீஷை விட்டுவிட்டு எப்படி இருக்கப் போகிறேன் என்ற நினைப்பே முழுசாய் ஒரு மலைச்சிகரத்தை என் மீது ஏற்றி வைத்தது போன்று மனசை கனக்க வைத்தது. லேசாய் மூச்சுத் திணறியது.'ஏங்க, உங்க பீரோவை லாக் பண்ணிவிடலாம்தானே? கேஷ், ஏ.டி.எம். கார்டு எல்லாம் எடுத்து உங்க ஹேண்ட்பேக்கில் வெச்சுக்கிட்டீங்களா? அப்பறம் பீரோவை லாரியில ஏத்தின பிறகு கத்தக் கூடாது!' -என் மனைவி பாகீரதியின் குரல் என்னை நிஜ உலகத்துக்கு அழைத்து வந்தது.மறதி மாஸ்டருடன் வருஷக்கணக்காகக் குடித்தனம் நடத்தும் அனுபவத்தின் வெளிப்பாடு.'தாராளமாய்ப் பூட்டிடலாம். பீரோ சாவியை மறக்காமல் என் ஹேண்ட்பேக்ல வெச்சிடு' என்று கூறிவிட்டு, பேக்கர்ஸ் அண்டு மூவர்ஸ் கம்பெனி ஆள்களிடம் திரும்பி, இன்னும் ஒரு மணி நேரத்துல கிளம்பிடலாம்தானே?' என்று பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன். அதிகாலையில் ஸ்ரீரங்கம் போய்ச் சேர்ந்து, பொழுது விடிவதற்குள் பொருள்களை அந்தப் புதிய (வாடகை) வீட்டில் இறக்கி வைத்துவிட்டால் தேவலை. 'இருப்பவனுக்கு ஒரு வீடு; இல்லாதவனுக்குப் பல வீடு' என்பது என்னைப் போன்று வாடகை வீடே விதியாகப் போனவர்களைச் சமாதானம் செய்வதற்கு ஏற்பட்டதா, இல்லை கேலி செய்வதற்காகப் படைக்கப்பட்டதா என்பது குறித்த ஐயம் என் மனசுக்குள் காலம் காலமாக வாடகை கொடுக்காமலே குடியிருந்து வருகின்றது.மூன்று வருஷத்துக்கு மேல் ஒரே ஊரில் தங்கியிருக்க முடியாத வங்கி உத்தியோகமும், சொந்த வீட்டைப் பற்றிக் கனவில் கூட நினைக்க முடியாத குடும்பச் செலவுகளுமாகச் சேர்ந்து கடந்த பதினைந்து வருடங்களில் பத்து வீடுகளுக்கும் மேல் காணும்படி செய்துவிட்டிருக்கின்றது.ஒவ்வொரு வீடு... ஒவ்வொரு அனுபவம்...ஜிலுஜிலுவென்ற பொள்ளாச்சி நகர வீடாகட்டும், கோவையின் ஆர்.எஸ்.புரம் ஒண்டுக் குடித்தன வீடாகட்டும், சேலம் அத்வைத ஆசிரமத் தெருவில் அமைந்த வீடாகட்டும், தஞ்சாவூரின் பங்காரு காமாட்சி கோயில் தெருவிலுள்ள வீடாகட்டும், கும்பகோணத்தின் திருநாகேஸ்வரம் வீடாகட்டும், தலைக்கு மேலே கோபுரங்களும் இடுப்புக்குக் கீழே கொசுக்களும் கொஞ்சும் சின்ன காஞ்சிபுரம் தும்பவனத்தெரு வீடாகட்டும், மதுராந்தகத்தின் ஏரிகாத்தராமர் குளக்கரையில் யானைக்கோவணம் போன்று பத்தடி அகலத்துக்கு நூறடி நீளமான பழைய வீடாகட்டும், மழைக்காலத்தில் தத்தம் கார்களையும் பைக்குகளையும் கர்ப்பத்தில் வைத்துக் காப்பாற்ற முயலும் வேளச்சேரி தண்டீஸ்வரம் நகரின் அடுக்குமாடிக் குடியிருப்பாகட்டும்... ஒவ்வொரு வீட்டிலும் விதவிதமான மனிதர்கள், விதவிதமான அனுபவங்கள்.தற்பொழுது பத்தாம் வகுப்பும், எட்டாம் வகுப்பும் படிக்கின்ற எங்கள் மகளும் மகனும் என் மாமானார் மாமியாரின் உபயத்தில் அவர்களுடன் பாண்டிச்சேரியில் தங்கியிருந்து படிப்பதால் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறோம். எப்பொழுதாவது கால், அரை, முழுப் பரிட்சை லீவுகளுக்கு எங்கள் பையனையும் பெண்ணையும் நாங்கள் வசிக்கும் ஊருக்கு வரவழைப்போம். தீபாவளி, பொங்கல் இத்தியாதி பண்டிகைகள் பெரும்பாலும் பாண்டிச்சேரியில்தான். இதோ கடந்த ஒன்றரை வருடகாலம் நாங்கள் குடியிருந்துவிட்டு இப்பொழுது காலிசெய்து கொண்டிருக்கின்ற வேளச்சேரி தண்டீஸ்வரம் அபார்ட்மென்ட் ஃப்ளாட்டில் செளகரியத்துக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஒரே ஒரு மனக்குறைதான். இந்த அபார்ட்மென்ட்டின் தரைதளத்திலுள்ள பார்க்கிங் ஏரியாவில் சுற்றிலும் பணக்காரக் களையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் விதவிதமான கார்களுக்கும் பைக்குகளுக்கும் நடுவில் நின்றபடி எப்பொழுது எனக்கு ஓய்வு தரப்போகிறாய் என்று கெஞ்சும் என்னுடைய பழைய ஸ்கூட்டரைப் பற்றிய ஆதங்கம் என் மனைவிக்கு இருந்து வந்தது. என் குழந்தைகளுக்கும்தான். புதிதாக ஒரு ஸ்கூட்டர் வாங்குவது ஒருபுறம் இருக்கட்டும். ஒவ்வொருமுறை வீடு மாற்றும் பொழுதும் லாரிக்கும், காருக்கும், ஏசி மிஷினை இறக்கி மீண்டும் மாட்டுவதற்குமே முப்பது நாற்பதாயிரம் பழுத்துவிடுகிறது. சில சமயங்களில் ஒரே ஊரில் இரண்டு மூன்று முறை கூட வீடு மாற்ற வேண்டியிருக்கும். எல்லாம் நம்ம நேரம்.தண்டீஸ்வரம் வீட்டில் பால் காய்ச்சிச் சாப்பிட்டுக் குடியேறி, அங்கிருந்து எனது அம்சமான ஸ்கூட்டரில் தரமணியிலிருக்கும் என் ஆபீஸூக்குப் போய்வரத் தொடங்கி சுமார் நாலைந்து நாள்களுக்குப் பிறகுதான் குழந்தை பிரகதீஷ் என் கண்ணில் பட்டான். மூன்று வயதுக்குள் இருக்க வேண்டும். எப்படியும் அடுத்த வருஷம் எல்.கே.ஜி.யில் சேர்த்துவிடுவார்கள். ப்ளே க்ரூப்பில் இன்னமும் சேர்க்காமல் விட்டதே அதிசயம்தான். சதா பெர்முடாஸில் காட்சியளிக்கும் ஐ.டி. கம்பெனி ஊழியரான கட்டுமஸ்து இளைஞனாகிய அப்பாவுக்கும், சின்ன வயசிலேயே இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிவிட்ட களைப்பும், அதே குழந்தைகளின் அழகையும் சாகசங்களையும் பற்றிய பெருமிதமும் கொண்ட இளம் அன்னைக்கும் பிறந்த இரண்டாவது குழந்தைதான் அந்த பிரகதீஷ். வயசுக்கு மீறிய துறுதுறுப்பு. மணக்கும் மழலைக்குரல். எப்பொழுதும் எதையோ தேடும் கண்கள். அப்புறம் அந்தக் கொழுகொழு கன்னங்கள். வீட்டு வாசலில் வந்து நிற்கும் மஞ்சள்நிறப் பள்ளிக்கூட வேனில் அண்ணனுடன் தானும் ஏறிக்கொண்டு போவேன் என்று ஒவ்வொரு நாளும் அடம் பிடிக்கும் அந்தக் குழந்தைத்தனம். முதன்முதலாகப் பார்த்த அந்த கணத்திலேயே தீர்மானித்துவிட்டேன், இந்த இடத்தில் குடியிருக்கும் வரையில் இந்தக் குழந்தைதான் என்னுடைய தோழன் என்று. அடுத்த சில தினங்களில் எங்கள் வங்கிக்கிளையின் சீனியர் மேனேஜர் தனக்குப் பிறந்த நாள் என்று கொடுத்திருந்த விலையுயர்ந்த டெய்ரி மில்க் சாக்லேட்டை உடனடியாகச் சாப்பிடத் தோன்றாமல், என் கைப்பையில் வைத்திருந்தேன். முன்னிரவில் வீடு திரும்பிய சமயம், எதிர் ஃப்ளாட் வாசலில் தன் அம்மாவின் இடுப்பில் அமர்ந்திருந்த குழந்தையை முதன்முதலில் பார்த்ததும் தன்னிச்சையாக அந்தச் சாக்லேட்டை எடுத்துக் கொடுத்தேன். சந்தோஷத்தில் மின்னிய கன்னங்களுடன், 'அங்கிள், நீ பேட் பாய்' என்றது குழந்தை.லேசாக அதிர்ந்த என்னிடம், 'தப்பா நினைச்சுக்காதீங்க ஸார். இவனுக்கு யாரைப் பிடிச்சுப்போனாலும் அவங்களைப் பார்த்து பேட் பாய்னு சொல்லிடுவான். அது தப்புடான்னு சொன்னால் கூட மாத்திக்க மாட்டேங்கிறான்' என்று அக்குழந்தையின் தாய் விளக்கமளிக்க, 'ஹோஹ்ஹோ' என்று நகைத்து, 'நைஸ் பாய்' என்று அந்தக் குழந்தையின் கன்னத்தில் என் விரலால் செல்லத்தட்டு தட்டிவிட்டு எங்கள் போர்ஷனுக்குள் நுழைந்து, 'பாகீ, காஃபி' என்றேன்.சற்று நேரத்தில் 'மம்மி, எனக்கு சாக்லேட்', 'ஊஹூம், தரமாத்தேன் போ' என்ற குழந்தைகளின் சண்டை எதிர் ஃப்ளாட்டின் கதவுகளுக்குப் பின்னால் சன்னமாகக் கேட்டது. சண்டை சற்று நேரத்தில் பிரளயமானது. இரண்டு குழந்தைகள் இருக்கும்பொழுது ஒரெயொரு சாக்லேட்டோ பிஸ்கட் பாக்கெட்டோ கொடுப்பது எத்தனை அறிவீனம் என்பது நான் அறியாத விஷயமல்ல. பாவம், என்னால் அந்த இளம் அன்னைக்குத்தான் மிகுந்த சிரமம்.ஞாபகமிருந்தால் நாளைக்கு மாலை ஆபீஸிலிருந்து வீடு திரும்பும்பொழுது இரண்டு சாக்லேட்டாக வாங்கி வந்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தபடியே பாண்டிச்சேரியிலிருக்கும் என் மாமனாருக்கு போன் போட்டு என் குழந்தைகளிடம் செல்போனைத் தரச்சொல்லி, 'ஏய் பசங்களா, இங்க நம்ம எதிர் போர்ஷன்ல இத்துனூண்டு குழந்தைடா. படு சுட்டி. என்ன பேச்சு பேசுது தெரியுமா... என்கிட்டயே சாக்லெட் வாங்கிக்கிட்டு என்னைப் பார்த்து அங்கிள் நீ ஒரு பேட் பாய்னு சொல்லுதுடா...' என்று பேசி முடிக்கும்பொழுது காஃபி வாசனை என் நாசியைத் துளைத்தது. 'பாகீ, அந்த எதிர் வீட்டுக் குழந்தை என்னைப் பார்த்து என்ன சொல்லுது தெரியுமா...?' என்று அவளிடமும் ஒருதரம் பரவசத்துடன் சொல்லி முடித்தேன்.அன்று இரவு அந்தக் குழந்தை பிரகதீஷை நான் என் ஸ்கூட்டரில் வைத்துக் கொண்டு சென்னை நகரம் முழுக்கச் சுற்றுவதாகவும், பார்க்குக்கு அழைத்துச் செல்வதாகவும், சாக்லேட் வாங்கித் தருவதாகவும், பதிலுக்கு அந்தக் குழந்தை 'அங்கிள் நீ ஒரு பேட் பாய்' என்று சொல்வதாகவும், 'டேய் குட்டி, என்னை குட் பாய்னு சொல்லுடா...' என்று நான் அந்தக் குழந்தையிடம் கெஞ்சுவதாகவும் இடைவிடாத கனவுகளைக் கண்டபடியே தூங்கிப்போனேன். அடுத்து வந்த சில மாதங்களும் பனிச்சறுக்கு விளையாடியபடியே வேகவேகமாகக் கடந்து சென்றன. பண்டிகைகளுக்கு நாங்கள் பாண்டிச்சேரி செல்வதும், நீண்ட விடுமுறைகளில் எங்கள் பையனும் பெண்ணும் வந்து செல்வதும் ஒரு குறைவுமின்றி நடந்து கொண்டிருந்தது. குழந்தை பிரகதீஷின் அம்மா என் மனைவி பாகீரதிக்குப் பேச்சுத்துணையாகிப் போனாள். குழந்தை பிரகதீஷோ எங்கள் வீட்டுச் செல்லப் பிள்ளையாகி மேலதிக நேரம் எங்கள் வீட்டிலேயே வளைய வந்தது. 'அக்கா, கொஞ்ச நேரம் இவனைப் பார்த்துக்கிறீங்களா, நான் கொஞ்சம் பேங்க் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்...' என்பது தொடங்கி இரண்டு போர்ஷன் குடும்பத்தலைவிகளும் ஃபெவிக்கால் போட்டு ஒட்டிக்கொண்டனர். பிரகதீஷின் அண்ணன் ஜெகதீஷ். அதுவும் குழந்தைத்தனம் மாறாத ஆறுவயசுப் பையன்தான். என்ன காரணத்தாலோ எங்களுடன் அதிகமாகப் பழகவில்லை. எப்பொழுதாவது நாங்கள் கொடுக்கும் ஸ்வீட் இத்தியாதிகளை முதலில் வேண்டாமென்று மறுத்து, வற்புறுத்தலுக்குப் பின்பு தயக்கத்துடன் வாங்கிக் கொண்டு 'தாங்க்ஸ் அங்கிள்' அல்லது 'தாங்க்ஸ் ஆண்ட்டி' என்று சொல்லிவிட்டு ஓடிவிடும் சமர்த்துப் பையன். ஒருவேளை குழந்தைகள் இரண்டும் சேர்ந்து எங்கள் வீட்டில் லூட்டி அடித்தால் எங்களால் தாங்க முடியாது என்று கடவுளாகச் செய்த ரகசிய ஏற்பாடாகவும் இருக்கலாம். எது எப்படியோ, பிரகதீஷ் எங்களுடன் பச்சக் என்று ஒட்டிக்கொண்டுவிட்டது நிஜம்.நானும் ஆபீஸ் முடிந்து வந்து காபி குடித்துவிட்டு விளக்கேற்றும் வேளையில் வெவ்வேறு சானல்களின் சீரியல்களில் லயிப்பதற்குப் பதில் குழந்தை பிரகதீஷுடன் விளையாடுவது, பிரகதீஷுக்குக் கதை சொல்லுவது என்று பொழுதைக் கழிப்பதுடன் 'குட்டிப்பையா, உனக்கு என்ன வேணும் சொல்லு, தோசையா, பூரியா?' என்று கேட்டு அவனுக்குப் பிடித்ததையே தயார் செய்வோம். இரவு உணவில் லேசாக வயிறு மேடிட்டுக் கொட்டாவி விடும் குழந்தையை எனது தோளில் சாத்திக்கொண்டு ஹாலுக்குள் நாலு எட்டு நடந்தால் நிமிடங்களில் தூங்கிவிடும். குழந்தையின் தூக்கம் கலையாமல் அதை என் தோளில் சாத்தியபடியே பூனைநடை நடந்து எதிர்போஷன் கதவை மெதுவாகத் தட்டி, 'குட்டிப்பையன் தூங்கிட்டாம்மா' என்று அதன் அம்மாவின் ஏந்திய கரங்களில் ஒப்படைப்பதும், ரொம்ப தாங்க்ஸ் அங்கிள், இப்பத்தான் ஜெகதீஷும் ஹோம் ஒர்க் முடிச்சுட்டு டின்னர் சாப்பிட்டான் என்றபடியே அந்த இளம் தாய் நன்றி பளிச்சிடும் கண்களுடன் குழந்தையைப் பெற்றுக்கொள்வதும் வாரநாள்களின் நடைமுறையானது. நாங்கள் தண்டீஸ்வரம் வந்து சேர்ந்த ஏழெட்டு மாதங்களில் அடுத்த கல்வியாண்டு தொடங்க, குழந்தை பிரகதீஷை சுற்றுவட்டாரத்தில் வெகு அருகில் இருக்கக்கூடிய ஒரு நர்சரியில் எல்.கே.ஜி. வகுப்பில் சேர்க்க ஏற்பாடாயிற்று. குழந்தையை அதன் தாய் காலை எட்டரை மணிக்கெல்லாம் தன் ஸ்கூட்டரில் அழைத்துச் சென்று விட்டுவிட்டு மதியம் பன்னிரண்டரைக்குத் திரும்ப அழைத்து வருவாள். வீடு திரும்பிய மறுகணம் குழந்தை எங்கள் வீட்டுக்குள் புகுந்துகொள்ளும். மதியம் இரண்டுமணி தாண்டிய நேரத்தில் வங்கியின் ஓய்வறை மேஜையில் எனது டிபன் கேரியரை நான் பசியுடன் திறக்கும் பொழுது 'குழந்தை பிரகதீஷ் இப்பத்தாங்க ஸ்கூல்லேருந்து வந்து என் கையாலே ரசம் சாதம் சாப்பிட்டுச்சு' என்று பாகீரதி போன் செய்வாள்.எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு வரத்தானே செய்கிறது. எத்தனையோ கிளைகளில் என்னை முழுசாக மூன்று வருஷம் விட்டு வைத்திருந்த எங்கள் வங்கியின் நிர்வாகம் எனக்கு எப்பொழுதோ கிடைத்திருக்க வேண்டிய - நானே மறந்து போயிருந்த - புரோமோஷன் பட்டியலைத் தூசு தட்டி என்னை மேனேஜர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்க்க ஆசைப்பட்டுவிட்டது. இங்கு வந்த ஒன்றரை வருடங்களுக்குள் மறுபடியும் இடமாற்றம். சென்னையிலிருந்து ஸ்ரீரங்கத்துக்குத் தூக்கியடித்து வந்த புரோமோஷன் உத்தரவு லேசாக என் வயிற்றைப் பிசைந்தது. ஸ்ரீரங்கம் என்னவோ எனக்குப் பிடித்த ஊர்தான். ஆனாலும் இந்த மேனேஜர் பதவியை நினைத்தால் 'பகீர்' என்றுதான் இருக்கிறது. இது வரை கிளார்க், சீனியர் கிளார்க், கேஷியர், அசிஸ்டென்ட் மேனேஜர் பட்டங்களுடன் எப்படியோ காலம் தள்ளியாகிவிட்டது. இனி பிராஞ்சு மேனேஜர் என்றால், டெபாஸிட் திரட்டுகிற பொறுப்பும் என் தலையில் விழும். பல்வேறு லோன்களையும் ஸாங்ஷன் செய்கின்ற கயிற்றில் நடக்கிற வேலைக்குப் பழக வேண்டும். திரும்பிவராத கடன்களுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். முரண்டுபிடிக்கும் கீழ்நிலைப் பணியாளர்களிடம் வேலை வாங்க வேண்டும். சண்டை பிடிக்கும் வாடிக்கையாளர்களிடம் சமாதானமாகப் போக வேண்டும். அதே நேரம் மேலதிகாரிகளின் நச்சரிப்புகளுக்கும் ஈடுகொடுக்க வேண்டும்.இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தக் குழந்தை பிரகதீஷுடன் இனி இருக்க முடியாது என்ற கவலையே என்னுடன் சேர்ந்து என் பாகீரதியையும் அரிக்கத் தொடங்கியது. 'இப்போ இந்த புரோமோஷன் வேணும்னு யார் கேட்டது?' என்பதே இந்தத் தருணத்தில் எங்கள் இருவரின் மனங்களில் உதித்த கேள்வியாக இருந்தது. இன்னும் இரண்டு வருஷம் கழித்துப் புரொமோஷனை வாங்கிக்கொள்கிறேன் என்று வங்கித் தலைமை அலுவலகத்துக்கு எழுதிப்போடலாமா என்று கூட ஒரு மூலையில் யோசனை கிளம்பியது. சக ஊழியர்களிடம் சொன்னால் 'யாருடா இந்தப் பைத்தியம்?' என்று நினைக்கக்கூடும் என்பதால் உடனடியாக அந்த யோசனையைக் கைவிட்டேன்.இதோ ஸ்ரீரங்கத்திற்குக் கிளம்ப வேண்டிய நாளும் வந்துவிட்டது. புது இடத்தில் சேருவதற்கு இரண்டு நாள்கள் முன்னதாகவே கிளம்புகிறேன். குழந்தைகள் பிரகதீஷ், ஜெகதீஷ் இருவரிடமும் நாங்கள் ஒரேயடியாகக் கிளம்பிச் செல்லும் விஷயத்தைச் சொல்ல வேண்டாம் என்று அவர்களின் பெற்றோர்களிடம் ஒரு வாரம் முன்னதாகவே சொல்லிவைத்திருந்தோம்.இரவு மணி பத்தை நெருங்கியது. எதிர்வீட்டுக் குழந்தைகள் இருவரும் தூங்கியாகிவிட்டது. போர்ஷன் சாவியை நாளை வரவிருக்கும் உரிமையாளரிடம் கொடுத்துவிடச் சொல்லி, தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகள் இருவருக்கும் மானசீக முத்தம் கொடுத்துவிட்டு வெளியில் வந்தோம். பிரகதீஷின் தோற்றம் தங்க விக்கிரகம்.'ஸ்ரீரங்கம் வந்தால் அவசியம் எங்க வீட்டுக்குக் குழந்தைகளோடு வாங்க!' என்று சொல்லி எங்களுக்காகக் காத்திருந்த காரில் ஒன்றிரண்டு சூட்கேஸ்களுடன் நானும் பாகீரதியும் ஏறிக்கொண்டோம். சாமான்களை ஏற்றிய லாரி சற்று முன்னர்தான் கிளம்பியிருந்தது.நவம்பர் மாதத்தின் ஜிலு ஜிலு காற்றை உத்தேசித்துக் காரில் ஏசியைப் போடவேண்டாம் என்று டிரைவருக்குக் கூறிவிட்டு என்ன பேசுவது என்று யோசித்தபடியே காரின் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தோம்.பரனூர் சுங்கச்சாவடி தாண்டியது.'முடிஞ்சபொழுதெல்லாம் வந்து பிரகதீஷைப் பார்த்துட்டுப் போகணுங்க' என்று மெல்லிய குரலில் கூறினாள் பாகீரதி.'ஆமாம் பாகீ. நிச்சயம் வந்து பாக்கணும்' என்று சொல்லி மெளனத்தில் ஆழ்ந்தேன்.கார் கதவுக் கண்ணாடியைச் சற்று மேலே ஏற்றிவிட்டேன்.'ஏய் குட்டிப்பையா, என்னை குட் பாய்னு சொல்லுடா?' என்று அந்தப் பிரகதீஷிடம் கெஞ்சிக்கொண்டே அவனுக்குச் சாக்லெட்டும் பொம்மையும் வழங்குவதான கனவுகளுடன் தூக்கத்தில் ஆழ்ந்தேன் நான்.