பிகார் மாநிலத்தை அறிந்துகொள்ள அந்த மாநிலம் முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டிய தேவையில்லை. பாட்னாவின் பெய்லி சாலையில் அமைந்துள்ள பிகார் அருங்காட்சியத்துக்குச் சென்றாலே, போதும். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பிகாரையும், அதன் வரலாற்றையும், பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் நுட்பமாக அறிந்துகொள்ள முடியும்.இந்த அருங்காட்சியகம் பிகாரின் கலாசாரத்தையும், வரலாற்றையும் மட்டும் கூறவில்லை. இங்கு மௌரியப் பேரரசு, அசோகப் பேரரசு, குப்தப் பேரரசு, மகதப் பேரரசு, பாலர் பேரரசு, பௌத்த, சமண மத வரலாறுத் தகவல்கள் காட்சிகளாகவும், கலைப் பொருள்களாகவும் நம் கண் முன் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் கடந்த கால வரலாற்றையும், பெருமையையும் அறிந்துகொள்ள விரும்புபவர்கள், இந்த அருங்காட்சியகத்துக்கு அவசியம் செல்ல வேண்டும்.ஜாது கர்பாட்னாவின் புத்த மார்க் சாலையில் இருக்கும் பாட்னா அருங்காட்சியகம் 1917-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இது உள்ளூர் மக்களால் பழைய அருங்காட்சியகம் அல்லது ஜாது கர் (மந்திர வீடு) என்று அழைக்கப்படுகிறது. இடநெருக்கடியால் அருங்காட்சியகத்தில் கலைப்பொருள்களைச் சரிவரக் காட்சிப்படுத்த முடியாததால், பாட்னாவில் பெய்லி சாலையில் பிகார் அருங்காட்சியகம் கட்டப்பட்டது. ஜப்பான் நாட்டின் புகழ் பெற்ற கட்டடக் கலைஞர் புமிஹிகோ மக்கி வடிவமைப்பில் இந்திய-ஜப்பானியக் கலைகள் இணைக்கப்பட்டு, இந்த அருங்காட்சியகம் 2017-ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. ரூ.517 கோடி மதிப்பில், சர்வதேசத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தின் பிரம்மாண்டமும், நவீனமும் அனைவரையும் பிரமிக்கச் செய்கிறது. பிகார் அருங்காட்சியகம் பண்டைய வரலாற்றையும், பாட்னா அருங்காட்சியகம் நவீனக் கால வரலாற்றையும் பிரதிபலிக்கின்றன. இன்னும் சொல்லப் போனால், கி.மு.வில் தொடங்கி கி.பி.1764-ஆம் ஆண்டு வரையிலான வரலாற்றுப் பொருள்கள், கலைப்பொருள்கள் பிகார் அருங்காட்சியகத்திலும், 1764-க்குப் பின்னர் கிடைத்த நவீனக் கலைப் பொக்கிஷங்கள், ஆங்கிலேயர்களின் கலைப்பொருள்கள் பாட்னா அருங்காட்சியகத்திலும் உள்ளன.30 ஆயிரம் கலைப் பொருள்கள்நீண்ட தொன்மையுடனும், பண்டைய பாரம்பரியத்துடன் பிரமாண்டமாக சுமார் 13 ஆயிரம் ஏக்கர் வளாகத்தில் 2.5 லட்சம் சதுர அடியில் இரு தளங்களுடன் 7 கலைக் கூடங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ள பிகார் அருங்காட்சியகம் சுற்றுலாப் பயணிகளையும், வரலாற்று ஆய்வாளர்களையும் வெகுவாக ஈர்க்கிறது. பொதுமக்கள் பார்வைக்காக சுமார் 30 ஆயிரம் கலைப்பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில், சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட திதார்கஞ்ச் யாக் ஷி என்ற சுதை வேலைப்பாட்டினால் செய்யப்பட்ட சிலை காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. மௌரியர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் பெண் சிலை, இந்திய செவ்வியல் சிற்பக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.நாளந்தா பல்கலைக்கழகத்தில் எடுத்து வரப்பட்ட செங்கற்களால் எழுப்பப்பட்ட சுவரும், அங்கு பழமை மாறாமல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது. பௌத்த, சமண மதங்களின் பிறப்பிடமான பிகாரின் ஆன்மிக வரலாற்றை விளக்கும் வகையில் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பிரம்மாண்டமான புத்தர், மகாவீரர் சிலைகள் இங்குள்ளன. குஷானர் காலத்தைச் சேர்ந்த காந்தாரக் கலைப் பாணியில் அமைக்கப்பட்ட புத்தரின் சுடுமண் தலைச் சிற்பம், இந்தியக் கலையில் கிரேக்கக் கலாசாரத்தின் தாக்கத்தை அழகாக விளக்குகிறது.உணர்ச்சிகளை கொட்டும் சிலைகள்கிமு 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மௌரியர் கால நடன மங்கை சுடுமண் சிலை, அக்காலப் பெண்களின் ஆடை அலங்காரம், தலைமுடி வடிவமைப்பு, நடன முத்திரைகளை மிக நுணுக்கமாகக் காட்டுகிறது. மெளரியர் கால மக்களின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் தத்ரூபமாக வெளிப்படுத்தும் சுடுமண்ணால் உருவாக்கப்பட்டுள்ள சிறுவன், சிறுமி சிலைகளும் உள்ளன.இதைத் தவிர்த்து குப்தப் பேரரசு காலத்தில் சிவப்பு பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்ட பார்வதி சிலை, பாலர் பேரரசு காலகட்டத்தில் கறுப்பு நிறப் பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்ட விஷ்ணு சிலை ஆகியவையும் காண்போரைக் கவருகிறது. மேலும், அசோகர், மௌரியர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சமையல் பொருள்கள், நாணயங்கள், ஆயுதங்கள் ஆகியவை கண்ணாடிப் பேழைக்குள் அழகாக வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் குழந்தைகளுக்காகவும் ஓர் அரங்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகள் தொட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வகையில் சிற்பங்கள், ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒன்றரை கிலோ மீட்டர் சுரங்கப் பாதை'அருங்காட்சியகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும் வகையில், இங்கிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாட்னா அருங்காட்சியகத்துக்கு ரூ.524 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது'' என்கிறார் பிகார் அருங்காட்சியக இயக்குநர் அஞ்சனிகுமார் சிங். அவர் மேலும் கூறியது:'கடந்தாண்டு இந்த அருங்காட்சியகத்துக்கு சுமார் 7 லட்சம் பேர் வந்தனர். அரசு வேலை நாள்களில் தினமும் 2 ஆயிரம் பேரும், விடுமுறை நாள்களில் சுமார் 4 ஆயிரம் பேரும் வருகை தருகின்றனர். இங்கு பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. பிகாரின் வரலாறு, கலை, பண்பாட்டை எடுத்துக் கூறும் இந்த அருங்காட்சியகம், சர்வதேச சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது. அதோடு நாடு முழுவதும் இருந்து வரலாற்று ஆய்வாளர்கள், வரலாற்று ஆர்வலர்கள், வரலாற்று மாணவர்கள் இங்கு வருவது அதிகரித்து வருவது பெருமைக்குரியது. அருங்காட்சியத்துக்கு வரும் பொதுமக்கள் சாலைகளைப் பயன்படுத்தாமல் எளிதாக இரு அருங்காட்சியங்களுக்கும் செல்லும் வகையில் உலகத் தரத்தில் சுரங்கப்பாதை உருவாக்கப்படுகிறது.8 மீட்டர் விட்டம் கொண்ட இந்த சுரங்கப்பாதை ஒரு கலைக்கூடமாகவே விளங்குகிறது. ஏனெனில், சுரங்கப்பாதையின் சுவர்களில் பிகாரின் பாரம்பரியம், கலாசாரத்தை வெளிப்படுத்தும் மதுபானி ஓவியங்கள், கலைப்பொருள்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படுகின்றன. இந்த சுரங்கப்பாதையை தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் கட்டமைத்து வருகிறது'' என்றார்.