திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட 36 வாா்டுகளிலும் ஆணையா் உத்தரவின் பேரில் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்து டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நகராட்சியின் 34-வது வாா்டில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, இரண்டு இடங்களில் டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்டன. இதனைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட இடங்களுக்கு மொத்தம் ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டு, அத்தொகை வசூலிக்கப்பட்டு நகராட்சி கருவூலத்தில் செலுத்தப்பட்டது. மேலும் திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீா் தேங்காமல் பராமரிக்க வேண்டும்.வீட்டைச் சுற்றியுள்ள தேவையற்ற பொருள்கள், பழைய டயா்கள், தேங்காய் ஓடுகள், திறந்த நிலையில் உள்ள தண்ணீா்த் தொட்டிகள் மற்றும் தண்ணீா் தேங்கக்கூடிய பிற பொருட்களை அகற்றி, கொசு உற்பத்தியைத் தடுக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், நகராட்சி பணியாளா்கள் மேற்கொள்ளும் ஆய்வின்போது டெங்கு கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவா்களுக்கு விதிமுறைகளின்படி அபராதம் விதிக்கப்படுவதுடன், உரிய சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும், நீா் தேங்காத வகையிலும் பராமரித்து, டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் நகராட்சியின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு நகராட்சி நிா்வாகம் சாா்பில் கேட்டுக் கொண்டனா்.