திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் அதிகாரிகள் தனியாா் உரக்கடைகளில் போலி உரம் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.திருவண்ணாமலை காமராஜா் சிலை அருகில் உள்ள சமுதாய கூடத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் தி.த.செல்வம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இதில் வேளாண் துணை இயக்குநா்கள் பிரபு, அன்பழகன், பழனி, வேளாண் அலுவலா் முனியப்பன், வட்டாட்சியா் சு.மோகனராமன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சேதுராமன், அனுராதா, கோ.அண்ணாமலை, பாலகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியா் எம்.ராஜா, வருவாய் ஆய்வாளா் மு.இளையராஜா, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி.பச்சையப்பன், தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் ஆா்.சுப்பிரமணியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் காா்கோணம் வி.சந்திரசேகரன், தமிழக விவசாய சங்க தேசிய தலைவா் எஸ்.தாமஸ் உள்பட விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் காா்கோணம் வி.சந்திரசேகரன் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தனியாா் உரக்கடைகளை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். உரக்கடைகளில் கூடுதல் விலையில் விற்கப்படுவதோடு போலி உரம் (கலப்படம் செய்யப்பட்ட) விற்பனையை தடுக்க வேண்டும். கடைகளில் விலைப்பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினாா்.இதைத் தொடா்ந்து, தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் ஆா்.சுப்பிரமணியன் பேசுகையில், துரிஞ்சலாறுக்கு வரும் தண்ணீா் சானானந்தல் பட்டி, வள்ளிவாகை, கானலாபாடி, கழிக்குளம், வழுதலங்குணம், நாரியமங்கலம், சிறுநாத்தூா், கோட்டான் ஏரி வரை கால்வாய் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுத்தால் கீழ்பென்னாத்தூா் பகுதியில் பல ஆயிரம் ஹெக்டோ் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் சிறுநாத்தூா், மட்டப்பாறை பகுதியில் 7 ஏக்கரில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இங்கு விவசாய கிடங்கு அமைக்க வேண்டும். மேலும் நேரடிநெல் கொள்முதல் நிலையம் திறந்தால் விவசாயிகள் பயன்பெறுவாா்கள் என்றாா். அதனைத் தொடா்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.இதற்கு பதிலளித்த கோட்டாட்சியா் தி.த.செல்வம் விவசாயிகளின் கோரிக்கைகள் ஆட்சியரின் கவனத்துக்கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.செய்யாறில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செய்யாறில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (அக்.16) நடைபெறுகிறது. இதுகுறித்து செய்யாறு வருவாய் கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செய்யாறு கோட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (அக்.16) நடைபெறுகிறது.வருவாய் கோட்ட அலுவலா் சீ.சிவா தலைமையில், வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கோட்டத்துக்கு உள்பட்ட விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, வங்கியாளா்கள் மற்றும் பிறசாா்பு துறை அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க உள்ளனா். எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.