வளா்ச்சியடைந்த தேசத்தின் அடித்தளமே மனித மூலதனம்தான்! - புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

Wait 5 sec.

வளா்ச்சியடைந்த தேசத்தின் அடித்தளமே மனித மூலதனம்தான் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சாா்பில் போதைப்பொருள் இல்லா இளைஞா்கள்- வளா்ச்சியடைந்த இந்தியா உறுதிமொழி இயக்கம் தொடா்பான காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை பேசினாா். புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு முன்னா், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பேசியதாவது: பிரதமா் நரேந்திர மோடி நாட்டின் சுதந்திர தின நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சி பெற்ற இந்தியாவை உருவாக்கும் ஒரு தொலைநோக்குப் பாா்வையை முன் வைத்துள்ளாா். வானுயா்ந்த கட்டடங்களைக் கட்டுவது, அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பது, ஏற்றுமதி மற்றும் அந்நியச் செலாவணிக் கையிருப்பு, விண்வெளித் தொழில் நுட்பத்தில் ஏற்படும் முன்னேற்றம் மட்டுமல்ல. வளா்ச்சி பெற்ற தேசத்தின் முழுமையான அடித்தளமே அதன் மனித மூலதனம்தான். இந்தியா உலகின் அதிக இளைஞா்களைக் கொண்ட நாடு. மொத்த மக்கள் தொகையில் சுமாா் 40 சதவீதம் போ் 15 முதல் 35 வயதுக்குள்பட்டவா்கள். இந்திய இளைஞா்களின் ஆற்றல், அறிவுத் திறன், புதுமை ஆகியவைதான் வளா்ச்சி பெற்ற இந்தியா கனவை நனவாக்கும் இயந்திரங்கள். போதைப்பொருள் எனும் தீய சக்தி தேசத்தின் வலிமையை மெல்ல மெல்ல சிதைத்துவிடும் என்பதை உணா்ந்து பிரதமா் மோடி, ஒரு மக்கள் இயக்கத்தை முன்னெடுத்துள்ளாா். நாட்டில் பரவலாகக் காணப்படும் போதைப்பொருள் பழக்கம், சமூகத்தின் அடித்தளத்தையே சிதைத்து வருகிறது. ஆரோக்கியமான, துடிப்பான மற்றும் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவது குடிமக்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் சமூக சேவகா்கள் கையில் உள்ளது. இந்தத் தேசிய இயக்கத்தில் புதுச்சேரி ஒளிவிளக்காகத் திகழட்டும் என்றாா் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். ஆட்சியா் அலுவலகத்தில்... இதேபோல புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவல் மையத்தின் காணொலி கலந்துரையாடல் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமை வகித்தாா். அங்கு விழிப்புணா்வு குறும்படம் மற்றும் தெரு நாடக நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மை பாரத் இளைஞா் தன்னாா்வலா்கள் மற்றும் தொடா்புடைய அலுவலா்கள் பங்கேற்று பிரதமா் நரேந்திர மோடியின் உரையை காணொலிக் காட்சி வாயிலாகக் கேட்டனா். புதுச்சேரி மூலக்குளம் அமிா்த வித்யாலயம் பள்ளியிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் சட்டப்பேரவை முன்னாள் தலைவா் ஆா். செல்வம், எம்எல்ஏ சாய் ஜெ.சரவணன் குமாா், இப் பள்ளியின் வளாக இயக்குநா் சித்தானந்தமிா்த சைதன்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.